உலகக் கோப்பை | நெட்டிசன்களின் இதயங்களை வென்ற நியூசிலாந்து அணி அறிவிப்பு

உலகக் கோப்பை | நெட்டிசன்களின் இதயங்களை வென்ற நியூசிலாந்து அணி அறிவிப்பு

Published on

வெலிங்டன்: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் அணியை அறிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் தொடரின் போது காயமடைந்தார் வில்லியம்சன். அப்போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் அவரை முழுமையாக மீளாத நிலையில் அவரை கேப்டனாக நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல், மூத்த வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான டிம் சவுத்தி அணியில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் தவிர 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் முக்கியப் பங்காற்றிய ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்மி நீஷம் மற்றும் டிரென்ட் போல்ட் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் இடம்பெறாத பட்சத்திலும் உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகியுள்ளனர். இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், டெவான் கான்வே, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் மற்றும் வில் யங் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடவுள்ளனர்.

வழக்கத்துக்கு மாறாக சமூக ஊடகங்களில் மிகவும் தனித்துவமான முறையில் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. வீரர்களின் குடும்பங்களை கொண்டு அறிவிக்கப்பட்டது. வீரர்களின் குடும்ப நபர்கள் மற்றும் உறவினர்கள் வீடியோவில் தோன்றி வீரர்களுடனான உறவையும், ஜெர்சி எண்ணையும் குறிப்பிட்டு அவர்களை அறிவித்தனர். வித்தியாசமான முறையில் மனதைக் கவரும் வகையில் அமைந்திருந்த இந்த வீடியோ உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் (துணை கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in