1978 போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு திண்டுக்கல்லில் நினைவுத் தூண்!

தூணின் மேல் பகுதியில் இடம்பெற்றுள்ள ஏர் உழவு மேற்கொள்ளும் விவசாயியின் சிற்பம். | படங்கள்: நா.தங்கரத்தினம் |
தூணின் மேல் பகுதியில் இடம்பெற்றுள்ள ஏர் உழவு மேற்கொள்ளும் விவசாயியின் சிற்பம். | படங்கள்: நா.தங்கரத்தினம் |
Updated on
2 min read

திண்டுக்கல்: விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது உலகம் அறிந்த உண்மை. அப்படி உலகத் துக்கே படியளக்கும் விவசாயிகள் இன்று கால நிலை மாற்றத்தாலும், போதிய மழையின்மை, பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்றவற்றால் பயிர் சாகுபடிக்கு செலவு செய்த பணத்தைக்கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஏற்படும் நஷ்டத்தால் தனது அடுத்த தலைமுறை விவசாயத்துக்கு வரக் கூடாது என்று நினைக்கும் நிலைக்கு சில விவசாயிகள் வந்து விட்டனர். இப்படியே சென்றால் எதிர்காலத்தில் நாம் உண்பதற்கு தேவையான உணவு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி விவசாயிகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

1978-ம் ஆண்டு இலவச மின் இணைப்பு, கடன் தள்ளுபடி கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் திண்டுக்கல் விவசாயிகளும் பங்கு பெற்றனர். போராட்டம் தீவிரமானபோது, அதைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி உட்பட 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த விவசாயிகளின் நினைவாக 1979-ல் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் வழியில் நொச்சி ஓடைப்பட்டி அருகே நினைவுத் தூண் அமைத்துள்ளனர். இதேபோல், வேடசந்தூரிலும் போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் நினைவாக நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தியாகங்களை இளைய தலைமுறையினருக்கு தெரியப் படுத்தவே இந்த தூண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டியில்<br />போராட்டத்தில் இறந்த விவசாயி நினைவாக<br />வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண்.
திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டியில்
போராட்டத்தில் இறந்த விவசாயி நினைவாக
வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண்.

இதுகுறித்து திண்டுக்கல் விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அதுவே முதல் முறை. இயற்கையையும், விவசாயத்தையும் புறக்கணித்து வாழ முடியாது என்பதை உணர்ந்ததால்தான், நம்முடைய முன்னோர்கள் விவசாயத்தை இறைவனுக்கு இணையாக வைத்து போற்றினார்கள். தற்போது மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக விளைநிலங் களை மனைகளாக மாற்றி வருகின்றனர். இதனால் விவசாயம் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் உணவுக்கு தட்டுப்பாடு வரலாம். விவசாயம் செழித்தால் விவசாயிகள் குடும்பத்துக்கு மட்டுமின்றி உலகத்துக்கே உணவு கிடைக்கும். அதனால் விவசாயத்தையும், விவசாயிகளையும் மக்கள் மறந்து விடக்கூடாது. பல்வேறு கஷ்டங்ளுக்கு நடுவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை வீணாக்கக் கூடாது என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in