

திருநெல்வேலி: உலக சோரியாசிஸ் தினத்தையொட்டி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோரியாசிஸ் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
நிகழாண்டின் கருப் பொருளான ‘அனைவருக்குமான அணுகல்’ என்பதை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை உதவி முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவ கண்காணிப்பாளர் பால சுப்பிரமணியன், உயர் சிறப்பு மருத்துவமனை கண்காணிப்பாளர் கந்த சாமி முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற தோல் மருத்துவ சிகிச்சை பிரிவு தலைவர் மகா கிருஷ்ணன், டாக்டர் முருகன் ஆகியோர் பேசியதாவது: சோரியா சிஸ் மனித சுய எதிர்ப்பு சக்தியின் விளைவாக தோலில் ஏற்படும் ஒருவித அலர்ஜி. இந்த நோயினால் பாதிக்கப்பட் டவர்கள் திருமணம் செய்யலாம். குழந்தை பெற்றுக் கொள்ளலாம். தாய்ப்பால் கொடுக்கலாம். இது தொற்று நோய் அல்ல. இது உயிருக்கு ஆபத்தான நோயும் அல்ல.
ஆனால், முறையற்ற மற்றும் தாமதமான சிகிச்சை பக்க விளைவுகளை ஏற்படுத்தும். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோரியாசிஸ் சிறப்பு சிகிச்சை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் அளிக்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்தால் இந்த நோயினுடைய தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு தெரிவித்தனர். விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது.
தோல் நோய் சிகிச்சை பிரிவின் துறைத் தலைவர் நிர்மலா தேவி வரவேற்றார். தோல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் மாலிக், சிவாய தேவி, கல்யாண குமார், பொது அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் கமலின் விஜி, மனநல சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் ராமானுஜம், டாக்டர் வித்யா, செவிலியர் பயிற்றுநர் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.