Last Updated : 10 Oct, 2023 07:36 PM

 

Published : 10 Oct 2023 07:36 PM
Last Updated : 10 Oct 2023 07:36 PM

சாலை, குடிநீர், கல்வி, மருத்துவ வசதியின்றி ஆதிவாசிகளாக வாழும் மலைக் கிராம மக்கள் - அஞ்செட்டி அருகே அவலம்

ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களே கரும்பலகையில் எழுதி பாடம் படிக்கும் அவலம்.

ஓசூர்: அஞ்செட்டி அருகே நூரோந்து சாமிமலை கிராமத்தில் சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், அப்பகுதி மக்கள் ஆதிவாசிகள் போல வாழ்ந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி அருகே கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் நூரோந்து சாமிமலை. இக்கிராமம் சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் வனங்களுக்கு மத்தியில் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

நூரோந்து சாமிமலையில் 700- க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மலை அடிவாரத்திலிருந்து 3 கிமீ தூரம் கரடுமுரடான மண் சாலை மட்டுமே இவர்களுக்கான சாலை வசதியாக உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால், அங்குள்ள 10-ம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் மூலம் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் நிலையுள்ளது.

அஞ்செட்டி அருகே நூரோந்து சாமிமலைக்கு செல்லும் கரடு, முரடான மண் சாலை.

இதேபோல, தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய், பொதுச் சுகாதார நிலையம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு இடையில் ஆதிவாசிகள்போல வாழ்ந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: நாங்கள் பல தலைமுறையாக இந்த மலையில் வசித்து வருகிறோம். இது வரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் எங்களின் குறைகளைக் கேட்க இங்கு வந்தது இல்லை, சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்படுவோரை இருசக்கர வாகனங்களில் அடிவாரத்துக்கு அழைத்துச் செல்கிறோம்.

நூரோந்து சாமிமலைக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகள்.

அதுவும் இரவு நேரம் என்றால் கூடுதல் சிரமம். கழிவுநீர் கால்வாய், தெரு விளக்குகள் இல்லை. குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக வீடுகளிலும் மின் விளக்குகளை கூட பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.

இங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் இல்லாததால், வசதியுள்ளவர்களின் குழந்தைகள் மட்டும் நகரப்பகுதியில் விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். எனவே, எங்கள் கிராமத்தை ஆய்வு செய்து சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x