விழுப்புரம் 30 | கழுவெளி நீர்தேக்கம் புனரமைப்பு எந்த நிலையில் உள்ளது?

மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில்  அமைந்துள்ள தடுப்பணை.
மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் அமைந்துள்ள தடுப்பணை.
Updated on
2 min read

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, பிரிக்கப்பட்டு தனியாக விழுப்புரம் மாவட்டம் கடந்த 1993-ல் உருவாக்கப்பட்டது. கடந்த செப். 30-ம் தேதியுடன் 29 ஆண்டுகள் முடிந்து. 30-வது ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய தொடர்ச்சி..

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி ஆந்திர மாநிலம் காக்கிநாடா வரை பக்கிங்காம் கால்வாய் பரந்து விரிந்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில், இந்தக் கால்வாய் வழியாக படகு போக்குவரத்து நடந்தது. விழுப்புரம் மாவட்டத்து பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் உள்ள கடல்நீர், கழுவெளி ஏரியில் உள்ள நன்னீரில் கலக்காமல் இருக்க பக்கிங்காம் கால்வாய் - கழுவெளி ஏரி இணையும் இடத்தில், ஆங்கிலேயர் காலத்தில் 77 ஷட்டர்கள் கொண்ட தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டது. வானூர் தாலுகாவில் உள்ள 21 கிராமங்கள் பயன்பெறும் வகையில், அப்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பராமரிப்பு இல்லாததால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தடுப்பணை பழுதடைந்து, நன்னீரில் கடல் நீர் கலந்து உப்பு நீராக மாறியது. இந்த கவனக்குறைவால் மட்டுமே, விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறின. இதனால் இப்பகுதி விவசாயிகள் இறால் பண்ணை நடத்துபவர்களுக்கு தங்கள் நிலங்களை விற்பனை செய்து விட்டனர்.

மரக்காணத்துக்கு இன்றைக்கும் அடையாளமாக உள்ள பக்கிங்காம் கால்வாய் முகத்துவார, தடுப்பணையை புதிதாக கட்ட வேண்டும். நீர் ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு, மானிய கோரிக்கை நிதி மூலம் ரூ.161 கோடி மதிப்பீட்டில் மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கழுவெளி ஏரி இணையும் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இதற்கான அரசாணை கடந்த 24.2.2020 அன்று வெளியானது.

கழுவெளி நீர் தேக்கம் புனரமைக்கும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது. பக்கிங்காம் கால்வாய், கழுவெளி ஏரி இணையும் இடத்தில் 200 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில், 32 நீர் போக்கிகள் கொண்ட தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது கடல் நீர் தரையின் அடிமட்டம் வழியாகச் சென்று நன்னீரில் கலக்காமல் இருக்க, தரைக்கடியில் 4.5 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் தரைக்கு மேல் 3.5 மீட்டர் உயரத்தில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. மேலும் கரையின் இரு புறங்களிலும் 5 மீட்டர் உயரம், 3 மீட்டர் அகலத்தில் 12 கி.மீ துாரம் வரை கரை பலப்படுத்தப்பட்டு வருகிறது.

மரக்காணம் பகுதியில் இருக்கும் கழுவெளி ஏரி 21 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. 10.50 கி.மீ., அகலமும், 12.80 கி.மீ., நீளமும் கொண்டது. சுமார் 70 சதுர கி.மீ நீர்ப்பரப்புள்ள மிகப்பெரிய ஏரி இது. இந்தப் பணி முடிந்தால் இப்பகுதி விளை நிலங்கள் மீண்டும் செழிப்புறும். இந்நிலையில் கழுவெளி நன்நீர் பிடிப்பு பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை கட்டும் பணிகள் மெல்ல நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட பொதுப் பணித்துறையினரிடம் கேட்டபோது, “2015-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின் பேரில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 176 மீட்டர் நீளமுள்ள கடைமடை அணை பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தடுப்பணை கட்டப்பட்டால் விவசாய நிலங்கள் பயன்பெறுவதுடன் 21 கிராமங்களின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

இத்தடுப்பணைக்கான பகுதியில் 3 கி.மீ பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 கி.மீ வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கழுவெளி நன்நீர் பிடிப்பு பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வனத்துறை அனுமதி அளித்த பின்பு அப்பகுதியின் பணிகள் தொடங்கும். இந்தத் தடுப்பணை கட்டிமுடிக்கப்பட்டால் 6.6 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதன் பரப்பு வீடூர் அணை போல 10 மடங்கு பெரியதாகும்.

இங்குள்ள கழுவெளி சதுப்பு நிலம் 5151.60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளைச் சேர்ந்த பறவைகள், இனப்பெருக்க காலத்தின்போது இப்பகுதிக்கு வந்து ஒன்று சேர்கின்றன. அச்சமயங்களில் மிகவும் அழகாக காணப்படும் இந்த கழுவெளி பகுதியை, ‘பறவைகள் சரணாலயம்’ என அறிவிக்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின் 16-வது பறவைகளின் சரணாலயமாக கடந்த 2021 டிசம்பர் மாதம் தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.

கழுவெளி நீர் தேக்கம் புனரமைக்கும் பணிகள் - கழுவெளி பறவைகள் சரணாலயம் இரண்டுமே மரக்காணம் பகுதிக்கான மிக நல்ல திட்டங்கள். ஆனால், வனம் சார்ந்த சட்டங்களால் ஒன்றையொன்று இடித்துக் கொண்டிருக்கின்றன. அவை அரசால் சரிசெய்யப்பட்டு, இரண்டும் செவ்வனே நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விழுப்புரம் மாவட்ட மக்களின் விருப்பம்.

தொடர்ந்து நம் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்த நமது பார்வை மற்றும் பலதரப்பட்டவர்களின் கருத்துகள்; அடுத்தடுத்த நாட்களில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in