Published : 06 Oct 2023 06:08 PM
Last Updated : 06 Oct 2023 06:08 PM

விழுப்புரம் 30 | ஒரு சமூகச் சிக்கலாக உருவெடுக்கும் ‘வேலை’ பிரச்சினை!

நந்தன் கால்வாயில் நீர்வரத்து இருந்தபோது எடுத்த கோப்புப்படம்.

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, பிரிக்கப்பட்டு தனியாக விழுப்புரம் மாவட்டம் கடந்த 1993-ல் உருவாக்கப்பட்டது. கடந்த செப். 30-ம் தேதியுடன் 29 ஆண்டுகள் முடிந்து. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

முந்தைய அத்தியாயத்தில் விவசாயம் சார்ந்த மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் சிக்கல்கள் குறித்து வெளியிடப்பட்டது. அந்த வகையில் இன்றையை தொடர்ச்சி.. சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் தென்பெண்ணையாற்று வழியாக கடலில் வீணாக கலந்து வருகிறது. 16.40 கி.மீ தொலைவுக்கு கால்வாய் அமைத்து இந்நீரை திருப்பி விட்டால் சுமார் 10 டிஎம்சி தண்ணீரால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். இதற்காக தென் பெண்ணையாறு - துரிஞ்சலாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை காமராஜர் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்கிறது. இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.

விழுப்புரம் மாவட்ட விவசாயத் தேவைக்கான முக்கிய எதிர்பார்ப்பான நந்தன் கால்வாய் சீரமைப்பு குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது ஆளுங்கட்சியை கைகாட்டுகின்றன. ஆனால் இப்பணி தொடங்கப்படவே இல்லை. இதுகுறித்து திமுக விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் அன்னியூர் சிவா கூறுகையில், “நந்தன் கால்வாயை காமராஜர், கக்கன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபின்பு இத்திட்டத்துக்காக அப்போது ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி குரல் கொடுத்து, நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சி மேற்கொண்டார். அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் இம்மாவட்டத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நந்தன் கால்வாய் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

அடுத்த ஆட்சி மாற்றத்தில் மீண்டும் முடங்கிப் போகும். கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் இதுதொடர்பான பணிகள் ஆராயப்பட்டு, அடுத்த ஆட்சி மாற்றத்தில் அப்படியே கைவிடப்பட்டது. அண்மையில் விழுப்புரம் மாவட்டத்துக்கு முதல்வர் வந்தபோது இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டபோது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நிச்சயம் நந்தன் கால்வாய் பணிகள் நடக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர், மாவட்டத்தின் வளர்ச்சி தொடர்பாக திமுக மீதான குற்றச்சாட்டுகளை விளக்கிப் பேசினார். “இந்த மாவட்டத்தின் வளர்ச்சி எல்லாமே திமுக ஆட்சிக்காலத்தில்தான் என்பதை நான் சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் இம்மாவட்ட மக்கள் இல்லை.

தமிழகத்திலேயே பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் அனைத்தும் அருகருகே அமைந்துள்ளது. ‘இந்தக் கட்டமைப்பு அனைத்துமே, திமுக ஆட்சிக் காலத்தில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது’ என்று சொல்வார்கள். இங்கு அரசு அலுவலகங்களை கொண்டு வராவிட்டால் எப்போதோ ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து இருப்பார்கள். இங்கு பேருந்து நிலையம் கொண்டு வர கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த எதிர்ப்புகளை எதிர்கொண்டு மாவட்ட வளர்ச்சியில் தொலை நோக்கு பார்வை கொண்டு செயல்பட்டதால் இன்று விழுப்புரம் நகரம் விரிவடைந்துள்ளது” என்று கூறுகிறார்.

“குடிசைகள் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு கட்டும் திட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 53,968 வீடுகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 7 முதல் 8 ஆயிரம் வீடுகள் கட்ட மட்டுமே ஆணை வழங்கப்படுவது வழக்கம். இது நமது மாவட்டத்துக்கு பெருமை அளிக்கும் விஷயம். முறையான ஆவணங்கள் வரப்பெற்றால் இன்னும் ஒதுக்கீடு செய்ய தயாராக இருக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்துக்கு சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, மாதிரிப்பள்ளி என கல்வித்துறைக்கு அனைத்து கட்டமைப்புகளும் செய்து தரப்பட்டுள்ளது. 90 சதவீத கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கொடிகட்டிபறந்த கள்ளச்சாராய விற்பனை பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என மாவட்ட நிர்வாகம் திணறுகிறது. இதில் கைது செய்யப்படுவர்களுக்கு சாதகமாக சட்டப்பிரிவும் பலவீனமாக உள்ளது என்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் பாலமுருகனிடம் கேட்டபோது, “பல்வேறு கல்வித்தகுதிகளை உடைய 97,818 பெண்கள் உட்பட 1,91,158 வேலை தேடும் இளையோர் தங்களது கல்வித்தகுதிகளை பதிவு செய்து, அரசு பணிக்காக உயிர்பதிவேட்டில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 2022-23 நிதியாண்டில் நடத்தப்பட்ட சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் 175 வேலையளிக்கும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் பங்கேற்ற 2,739 பேரில் 504 பெண்கள் உட்பட 916 பேர் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம், கடந்தாண்டில் 1,733 பேர் தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இவர், இவ்வாறு குறிப்பிடுவது சிறிய அளவிலான பணியிடங்களுக்கானதே. அரசு நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் வேலையே இல்லாமல் இருக்கும் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான நல்லதொரு நுழைவுச் சீட்டு. ஆனால், இதைத் தாண்டி, பயின்ற கல்வியில் திறன் குறைந்து வேலைவாய்ப்பு கிடைக்காதோரின் எண்ணிக்கை விழுப்புரம் மாவட்டத்தில் மிக அதிகமாக உள்ளது. அது ஒரு சமூகச் சிக்கலாக உருவாகியிருக்கிறது. இதற்கு எந்த ஆட்சியாளர்களையும் குறை கூறாமல், வேலை தேடும் நுணுக்கங்களை கல்லூரி அளவில் கற்றுத் தர வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மாவட்டத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ள வர்களின் கருத்துகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுடன் நமது பார்வையும் இணைந்து அடுத்தடுத்த நாட்களில்...

முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | விவசாயம் சார்ந்த வளர்ச்சி எப்படி? - ஒரு பார்வை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x