

ஓசூர்: தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாமல் போலி முகவரியுடன் ஓசூரில் சிறார்களுக்கு உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்தும், ‘சிரிஞ்ச் சாக்லெட்கள்’ அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனையைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் நகரான ஓசூரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் குடும்பத்தினருடன் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வடமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் குட்கா, பான்மசாலா, கஞ்சா சாக்லெட் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை நீறமூட்டப்பட்ட சாக்லெட் வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் சிரிஞ்ச்களில் செயற்கை நீறமூட்டி பயன்பாட்டுடன் கூடிய சாக்லெட் மற்றும் சிகரெட் வடிவிலான சாக்லெட் வகைகள் அதிக அளவில் பள்ளிகள் அருகே விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த வகை சாக்லெட்களில் தயாரிப்புத் தேதி மற்றும் காலாவதி தேதி இருப்பதில்லை. இதன் ருசி சிறார்களை மீண்டும், மீண்டும் சாப்பிட தூண்டுவதால், ஆபத்தை உணராமல் சிறார்கள் அதிக அளவில் வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர். எனவே, சிறார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாக்லெட், இனிப்பு வகைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தடுக்க வேண்டும் எனக் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: வடமாநிலங்களில் தயாரிக்கப்படும் கஞ்சா சாக்லெட் மற்றும் குட்கா பொருட்களை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மறைமுகமாக வாங்கி வந்து ஓசூர் பகுதியில் அதிக அளவில் விற்பனை செய்கின்றனர். இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறார்களைக் குறி வைத்து பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட திரவ நிலையில் உள்ள சிரிஞ்ச் சாக்லெட் விற்பனை அதிகரித்துள்ளது.
எனவே, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் இனிப்புகள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். சிரிஞ்ச் வகை சாக்லெட் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அதன் விற்பனையைத் தடுக்கும் நிலையில், ஓசூரிலும் இதைத் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வியாபாரிகளுக்கு எச்சரிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கூறியதாவது: சிரிஞ்ச் மற்றும் சிகரெட் வடிவில் வரும் சாக்லெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இருப்பதில்லை, அதேபோல, போலியான முகவரியில் விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற சாக்லெட்டுகள் குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை சிறுவயதிலிருந்தே தூண்டுவதுபோல அமைகிறது.
இதுபோன்ற சாக்லேட்கள் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் இதன் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சாக்லெட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.