

மதுரை: சாதிப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. பிடித்த துறையில் அதிலும், வேலை பார்த்துக்கொண்டே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக தடகளப் போட்டியில் பதக்கங்களை குவித்து வருகிறார் மதுரை மாவட்ட ஆயுதப்படை பிரிவு தலைமைக் காவலர் பி.சந்துரு.
இவர் ஏற்கெனவே ஜப்பானில் நடந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கான ஆசிய அளவிலான போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் வெள்ளி, மலேசியாவில் நடந்த 100 மீ. ஓட்டத்தில் வெள்ளி, நெதர்லாந்தில் நடந்த போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா நாட்டில் நடந்த உலக காவல் துறையினருக்கான போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளி, 100, 200 மீ. ஓட்டத்தில் 2 வெண்கலம், 4x100 மீ. ஓட்டத்தில் வெள்ளி பதக்கங்களை வென்றார். இது தவிர உள்நாட்டில் மதுரை, திருச்சி காவல்துறை அணிகள் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள மட்டப்பாறை எனது சொந்த ஊர். வாடிப்பட்டி அருகிலுள்ள பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது தடகளப் போட்டியில் மாநில அளவில் பங்கேற்று சான்றிதழ்களை பெற்றேன்.
இது போன்று 100, 200 மீட்டர் ஓட்டத்தில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதால் 2003-ம் ஆண்டில் கல்லூரியில் காலடி வைத்த சில மாதங்களிலேயே எனக்கு காவல் துறையில் பணி வாய்ப்பு கிடைத்தது. தற்போது எனக்கு காவலர் என்பதுடன் தடகள வீரர் என்ற அடையாளமும் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
கனடாவில் நடந்த போட்டியில் பதக்கங்களை வென்றபோது, தமிழக முதல்வர், டிஜிபி எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர். இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும் என எண்ணத்தில் ‘ஏஆர்ஏசி’ என்ற பெயரில் விளையாட்டு கிளப் ஒன்றை ஏற்படுத்தினேன்.
அதன் மூலம் காவல் துறையினர் மற்றும் கட்டணம் செலுத்தி தடகளப் பயிற்சி பெற இயலாத ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆயுதப்படை மைதானத்தில் இலவச பயிற்சி அளிக்கிறேன். தற்போது என்னிடம் 100-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர். என்னிடம் பயிற்சி பெற்ற மகாலட்சுமி என்ற எஸ்.ஐ.யின் மகள் பம்மி வர்ஷினி தேசிய, மாநில நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார்.
இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதன் மூலம் தனி மனித ஒழுக்கம் மேம்படும். சிறுவயதில் போதைப் பொருள் போன்ற தவறான பழக்கத்தில் ஈடுபடுவது தடுக்கப்படும். ஆரோக்கியமான இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் தடகளப் பயிற்சி அளிக்கிறேன். தென் மண்டல ஐஜி நரேந்திரன், டிஐஜி ரம்யா பாரதி, எஸ்பி சிவ பிரசாத் உள்ளிட்டோர் எனது முயற்சிக்கு ஊக்கமளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.