Last Updated : 18 Aug, 2023 07:08 PM

Published : 18 Aug 2023 07:08 PM
Last Updated : 18 Aug 2023 07:08 PM

பாலியல் கல்வி 1 | எப்போது தவிர்க்கப்படும் பாலினப் புறக்கணிப்பு?

என்றாவது ஒரு நாள் உங்கள் டீன் ஏஜ் மகளிடமோ, மகனிடமோ பாலினம் (Gender) சார்ந்த பிரச்சினைகளை, பாலியல் (Sex) விழிப்புணர்வு தரும் விஷயங்களைப் பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களா? வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட, நீங்கள் கேட்டது, படித்தது பற்றியாவது பேசியுள்ளீர்களா?

உதாரணத்துக்கு, பார்சிலோனாவில் நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடை இல்லாமல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டது குறித்தோ அல்லது ஒரு பெண் அருவியில் மேலாடை இல்லாமல் குளித்தது தமிழகத்தில் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது குறித்தோ வளர்ந்த பிள்ளைகளுடன் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்திருக்கிறீர்களா? நீங்கள் பேசாவிட்டாலும் அப்பா/ அம்மா நான் இப்படி ஒரு செய்தியை வாசித்தேன், கேள்விப்பட்டேன் என்று உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்காவது சுதந்திரமான மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்களா?

எடுத்தவுடனேயே அணுகுண்டுகளை வீசுவதுபோல் இப்படியெல்லாம் கேள்விகள் இருக்கிறதே என இதைக் கடந்து போய்விட உங்களுக்குத் தோன்றுகிறதா? ஐயோ இதைப் பற்றியெல்லாம் எப்படி தாய், தந்தையரிடம் பேச இயலும்? இது என்ன வம்பாயிருக்கு எனக் கூச்சமாகக்கூட இருக்கும். அப்படி என்றால் பெற்றோர்களே, பிள்ளைகளே உங்களுக்கானதுதான் இந்த அறிமுகக் கட்டுரையும், அடுத்தடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களும்.

தந்தை - மகள், சகோதர - சகோதரி போன்ற ரத்த உறவுகள் தாண்டி ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டால் அது 'சம்திங்' என்ற ஒரு வகையறாக்குள் தான் இங்கே அடக்கப்படுகிறது. அதற்குக் காரணம் புரிதல் இல்லாமையே. உடலில் ஏற்படும் மாற்றங்கள், இனக்கவர்ச்சியால் எழும் சிந்தனைகளுக்கு வழிகாட்ட ஆள் இல்லாமலும் வடிகால் இல்லாமலும் தான் இங்கே பல குழந்தைகள் வழி தவறி விடுகிறார்கள்.

பாலியல் விழிப்புணர்வுக் கல்வி ஏன் அவசியம்? - குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி ஏன் அவசியம் என்று நம்மிடம் பேசினார். அவர் கூறியது: “குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை 5 வகைப்படுத்துகிறோம். அவை: உடல் சார்ந்த வன்முறை, மனம் சார்ந்த வன்முறை, பாலியல் வன்முறை, புறக்கணிப்பால் நிகழ்த்தப்படும் வன்முறை, தொழில்நுட்பம் வாயிலாக நிகழும் வன்முறைகள் ஆகும். இவை எல்லா வன்முறைகளையும் உள்ளடக்கியதுதான் பாலியல் வன்முறை.

சமீப காலமாக இத்தகைய பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதுவும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே வன்முறையாளர்களாக இருப்பதும் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில்தான் பாலியல் புரிதல் ஏற்படுத்துவதன் அவசியம் உருவாகிறது. பாலியல் குற்றங்களைத் தடுக்க பாலியல் புரிதல் வேண்டும். Know Your Body என்ற அறிவியல்பூர்வ அணுகுமுறையை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக, 9 முதல் 15 வயதுள்ள போதே குழந்தைகளிடம் அதை கொண்டு சேர்த்துவிட வேண்டும்.

தேவநேயன்

நம் உடல் இப்படித்தான் இருக்கும். நம் உடலில் இத்தகைய மாற்றங்கள், இந்தந்த பருவத்தில் ஏற்படும். நம் உடலை எங்கெல்லாம் ஒருவர் தொடலாம். எது பாதுகாப்பான தொடுதல். இது பாதுகாப்பற்ற தொடுகை. இனப்பெருக்க ஆரோக்கியம் என்றால் என்ன? - இவை எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். பள்ளியில் பாலியல் விழிப்புணர்வா என்று கம்பு சுற்றிவரும் கலாசார காவலர்கள் குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 2007-ஆம் ஆண்டு மத்திய மகளிர் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 3-ல் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டிருந்தது. போக்சோ (POCSO) என்ற சட்டம் 2012-ல் வருவதற்கு இந்த ஆய்வறிக்கை மிகப்பெரிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆக, முதலில் குழந்தைகள் மத்தியில் அவர்களின் உடல் சார்ந்த உண்மைகளை விளக்கிப் பேச வேண்டும். இரண்டாவதாக குழந்தைகளை நம்ப வேண்டும். ஒரு குழந்தை ஒரு நபரை குற்றம் சொன்னால் அதற்கு செவி சாய்க்க வேண்டும். ‘ச்சே ச்சே அந்த அங்கிளா... நீ ஏதாவது சொல்லாதே’ என்று அடக்கிவிடக் கூடாது. குழந்தைகள் வன்முறையாளர்கள் பலரும் அந்தக் குழந்தையின் குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராகவே இருக்கிறார்கள்.

அடுத்தபடியாக, ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாகிவிட்டால், அக்குழந்தையை குற்ற உணர்வில் தள்ளாமல் நம்பிக்கை ஊட்ட வேண்டும். ‘குற்றவாளி தான் வெட்கப்பட வேண்டும். நீ கூனிக் குருக வேண்டாம்’ என்று ஊக்குவித்து வாழ்க்கையைத் தொடர உதவ வேண்டும். ஒரு குழந்தை வன்முறைக்கு உள்ளான பிறகு சட்டம், மருத்துவம், நீதி என ஆயிரம் கைகளை நீட்டுவதற்குப் பதிலாக குழந்தை வன்முறைக்கு உள்ளாகாமல் இருக்க விழிப்புணர்வு என்ற ஒரு கண்ணைத் திறந்தால் போதும்.

பள்ளிகளில் உடல் பற்றிய விழிப்புணர்வு, பாலின சமத்துவம், பாலின நீதி, மதிப்பீடு கல்வி, வாழ்க்கைத் திறன் கல்வி, பாதுகாப்பான இணையப் பயன்பாடு போன்றவற்றை போதிக்க வேண்டும். பகுத்தறிவும், அறிவியல் அறிவும் சேரும்போது ஒரு குழந்தை தன்னை வன்முறைக்கு உள்ளாக நினைப்பவரை கேள்விக்கு உள்ளாக்கும். இணையத்தில் யாரேனும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால் எனக்கு அறிமுகமே இல்லாத இவருக்கு என் மேல் என்ன அக்கறை என்று யோசிக்க வைக்கும். அப்போது அக்குழந்தைக்கு, எதிராளிக்கு தேவைப்படுவது தன் உடல் என்று புரியும். இது பாலியல் குற்றங்களைத் தடுக்கும் என்று பாலியல் விழிப்புணர்வு கல்வி ஏன் அவசியம்” என்பதை எடுத்துரைத்தார்.

பாலினங்கள் அறிவோம்: பாலியல் விழிப்புணர்வுத் தொடர் என்றதுமே முதலில் இங்கே ஏற்படுத்தப்பட வேண்டியது பாலினம் பற்றிய விழிப்புணர்வு தான் என்று கூறுகிறார் மதுரையைச் சேர்ந்த கோபிஷங்கர். இவர் இடையலிங்கம் என்ற பாலினத்தைச் சேர்ந்தவராவார். அவருடனான கலந்துரையாடலில் இருந்து, "ஒரு குழந்தை பிறக்கும்போது அதற்கு பால் அடையாளம் (sex identity) வழங்கப்படுகிறது. பிறப்புறுப்பைப் பொறுத்து குழந்தை ஆண், பெண் அல்லது இடையலிங்கம் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், குழந்தை வளர வளர அதற்கு பாலின அடையாளம் (gender identity) திணிக்கப்படுகிறது.

ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். அப்பு என்ற சிறுவன். ஒருநாள் தன் அக்காவின் பிங்க் நிற டிஷர்ட்டைப் போட்டுக் கொள்கிறான். உடனே அப்பா, அம்மா ‘டேய் அக்காவோட சட்டையைப் போட்டிருக்க... நீ ஆண்பிள்ளை’ எனக் கூறுகிறார்கள். அக்கா ஓடிவந்து ‘டேய், நீ பையன். நீ போய் பிங்க் கலர் டிஷர்ட் போடலாமா?’ எனக் கேட்கிறாள். உடனே அப்பு குழம்பிப் போய் நாய்க்குட்டியிடம் போய் ‘நான் பையன். நான் பிங்க் நிறம் போடக்கூடாதா?’ என்று கேட்கிறான். நாய்க்கு பதில் சொல்லத் தெரியுமா? முடியுமா? அதனால் அப்புவுக்கு பதிலே கிடைப்பதில்லை.

கோபிஷங்கர்

அப்பு தனக்குப் புரியாததை தானும் பழகிக் கொள்கிறான். இப்படித்தான் பல்வேறு பாலின அடையாளங்களும் புகுத்தப்படுகின்றன. அப்பு கதையை நான் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் குழந்தைகள் மத்தியில் ஒரு விவாதம் உருவாகும். அது அவர்களின் உடல் பற்றிய விவாதம். நாம் பூமி பற்றி எர்த் சயின்ஸ் படிக்கிறோம். விண்வெளி பற்றி விண்வெளி அறிவியல் படிக்கிறோம். ஆனால், நம் உடலைப் பற்றிய உடல் அறிவியல் (Body Science) மட்டும் ஏன் பேசக்கூடாத தலைப்பாக வைத்திருக்கிறோம்.

ஆண் என்றால் XY குரோமோஸோம்கள், பெண் என்றால் XX குரோமோஸோம்கள், இன்டர்செக்ஸ் நபர்களுக்கு XXX,XXY உள்பட 16 வகையான குரோமோஸோம் கட்டமைப்புகள் உள்ளன. நான் இடையலிங்க பால் அடையாளத்துடன் பிறந்தேன். நான் ஆணாக வாழ்கிறேன். ஒரு பெண்ணாக பிறந்த நபர் ஆணாக வாழ நினைத்தால் அவர் திருநம்பி ஆகிறார். ஆணாகப் பிறந்த நபர் பெண்ணாக வாழ விரும்பினால் அவர் திருநங்கை ஆகிறார். மாற்று பாலினத்தவர் பல பால் புதுமைகளுடன் இருக்கிறார்கள்.

இவை எல்லாம் பள்ளிகளிலேயே உடல் அறிவியலாகக் கற்றுக் கொடுக்கும்போது பாலின புறக்கணிப்பு (gender ostracisation) தவிர்க்கப்படும். எல்லோரும் சமூகத்தில் இயைந்து வாழும் சூழல் உருவாகும். அதனால்தான் நான் எப்போதும் குழந்தைகளுக்கு உடல் அறிவியல் கல்வி போதியுங்கள் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகள் தங்கள் உடலில் என்ன இருக்கிறது என்ற அறிவியலை தெரிந்து கொள்ளட்டும். இந்தப் புரிதல் அவர்களுக்கு ஒரு சுதந்திரத்தைத் தரும்” என்றார்.

வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்: பாலின சமத்துவம் எப்படி வீட்டில் இருந்து கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமோ அதுபோல் பாலியல் விழிப்புணர்வுக் கல்வியும் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதுதான் நம் குழந்தைகள் தவறாகக் கட்டமைக்கப்பட்ட கற்பிதங்களை நம்பி ஏமாறாமல் காப்பாற்றும்.
யோசித்துப் பாருங்கள் பெற்றோர்களே! உங்களுடைய பதின்ம வயதில் பாலுறவு சார்ந்த விஷயங்கள் சில மலினமான கதை புத்தகங்கள் வாயிலாக கிடைத்திருக்கும். அவற்றில் கிளுகிளுப்பைத் தவிர வேறேதும் இருந்திருக்காது. அதை நீங்கள் வைத்திருக்கும், படிக்கும் நிமிடங்கள் திக்திக் நிமிடங்களாக இருந்திருக்கும்.

ஆனால், இப்போது விரல் நுணியில் தொடுதிரையில் உலகம் காணக் கிடைக்கிறது. ஆன்லைன் வகுப்பு என்று சொல்லிவிட்டுக் கூட நம் குழந்தைகள் புத்தகத்தின் மீதே மின்னனு சாதனங்களை வைத்துக் கொண்டு பார்ன் படங்களைக் கூட பார்க்கலாம். வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளில் ஏ ஜோக்ஸ், மலினமான வீடியோக்கள் எல்லாமே அவர்களுக்குக் கிடைத்துவிடும். அவர்கள் அதைப் பார்த்தார்களா என்பதை அறியக்கூட முடியாத அளவுக்கு ஹிஸ்டரி கிளியர் செய்துவிட்டுப் போய்விடுவார்கள். அப்படியென்றால் என்ன செய்யலாம்? அவர்களை மிரட்டி மிரட்டி வளர்க்கலாமா? மாரல் போலிஸிங் செய்யலாமா? எனக் கேட்காதீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளுடன் நேரம் செலவழியுங்கள். அதை குவாலிட்டி டைம் எனக் கூறுகிறார்கள். அந்தத் தரமான நேரத்தில் குழந்தைகளிடம் பேசுங்கள். சகஜமாகப் பேசுங்கள். சங்கடப்படாமல் பேசுங்கள். நீ ஆண், நீ பெண், நீ மாற்று பாலினத்தவர். இதுதான் உடல். உடல் இந்தந்த வயதில் இப்படியெல்லாம் மாறும். உடலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலை நாம் நேசிக்க வேண்டும் என்று எடுத்துக்கூறுங்கள். உடல் சார்ந்து எதெல்லாம் உண்மையானவை, எவையெல்லாம் போலி கற்பிதங்கள் என எல்லாவற்றையும் பேசுங்கள். அதையும் தாண்டி ஆண் - பெண் உறவு ஏன், எதற்காக, எப்போது அது சாத்தியமாகும், விவரம் தெரியாமல் உறவு கொண்டால் என்னென்ன பின்விளைவுகள் நேரும் என்பதையெல்லாம் உடைத்துப் பேசுங்கள். பாலியல் கல்வி என்பது பாலுறவை சொல்வது அல்ல. சமூகத்தில் பாலின சமத்துவத்தைப் பேண போதிக்கப்படும் கல்வி என்று ஆழ்ந்து பேசுங்கள்.

இவையெல்லாம் எப்படிப் பேசுவது என்று படித்த பெற்றோருக்கே கூட தயக்கம் இருக்கலாம். நிபுணர்களின் கருத்துகளோடு பெற்றோர்களுக்கு வழிகாட்டவும், குழந்தைகளுக்கு (இந்தியாவில் 0 முதல் 18 வயது வரையிலானவர் அனைவரும் குழந்தைகளே) விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே இந்தத் தொடரின் நோக்கம். இதையொட்டிய மற்றுமொரு தலைப்புடன் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

| தொடர்ந்து கற்போம்... |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.do.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x