மதிய உணவு வேளையும் ‘மாஸ் மஹாராஜா’ ரவி தேஜாவும்! - திரை அனுபவப் பகிர்வு

ரவிதேஜா
ரவிதேஜா
Updated on
3 min read

ஓர் அலுவலக நாளில் மதிய நேரம் தோழிக்கு போன் செய்தேன். உணவு இடைவேளையா என்றாள். ஆம், சாப்பிட்டுவிட்டேன். பிரேக் என்பதால் உன்னிடம் பேச அழைத்தேன் என்றேன். "இவ்வளவு சீக்கிரமா" என்று வினவினாள். ஆம் "காமெடி சேனல் உபயம்" என்று சொல்லிவைக்க எதிர்முனையில் அவளும் "எனக்கும் தான் காமெடி சேனல் அல்லது தெலுங்கு டப்பிங் படம் இருந்தால்போதும் சாப்பாடு சட்டென இறங்கிவிடும்" என்றாள்.

அப்போதுதான் அந்த கான்வெர்சேஷன் சுவாரஸ்யமாக பில்ட் ஆனது. "அட எனக்கும் எனக்கும் அது பிடிக்குமென்றேன்..." என்ற விஜய் பட பாடல் பாணியில் உற்சாகத்தோடு "எனக்கும் தான் ஸ்வர்ணா. அதுவும் ரவிதேஜா என்றால்..." என ஆரம்பித்து 5 நிமிடக்களுக்கும் மேலாக மாஸ் மஹாராஜா பற்றிய சிலாகிப்புகள் நடந்தன. அதன் நீட்சியாகத்தான் 'மாஸ் மஹாராஜா' ரவி தேஜா பற்றிய இந்தப் பதிவு எழுதும் எண்ணமும் வந்தது.

நடிகர் ரவிதேஜா உண்மையில் எனக்கு அறிமுகமானது என்னவோ எங்கள் வீட்டு வாண்டு, நண்டு, சிண்டுகள் மூலமாகத்தான். விஜய் சூப்பர் தொலைக்காட்சி சேனல் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு பெயர் பெற்றது. அதில் வரும் படங்களைத் தவறாமல் பார்ப்பதில் அந்த சில்லு வண்டுகளில் சில கில்லி. ரவிதேஜா படங்களை டைமர் போட்டுவைத்து பார்ப்பார்கள்.

அந்த கில்லிக் கூட்டம்தான் ஒரு விடுமுறை நாள் நண்பகலில் என்னை வற்புறுத்தி 'கிராக்' படத்தைப் பார்க்க வைத்தனர். ரவிதேஜாவின் படங்களில் நான் முதன்முதலில் பார்த்ததும் அதுதான். முதலில் கொஞ்ச நேரம் மனம் ஏனோ லயிக்கவில்லை. அதன்பின்னர் ஒரு யதார்த்தமான நடிப்பு தெரியவே படத்தை குதூகலமாக பார்த்து முடித்தோம்.

இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரவிதேஜா மட்டுமல்ல, நிறைய தெலுங்கு டப்பிங் படங்களைப் பார்த்துவிடுவது வழக்கமாகிவிட்டது. அதுமட்டுமல்ல மகேஷ் பாபு ஒரு படத்தில் சொல்லும் டயலாக் பாணியில், "தெலுங்குப் பட கதைகளுக்கு, அந்த உதைகளுக்கு, அவர்கள் அணியும் உடைகளுக்கு, அந்த அதிரிபுதிரி மெட்டுகளுக்கு (பெரும்பாலும் தமன் இசையாக இருக்கும்) குடும்பத்துக்குள் நடக்கும் சம்பவங்களை ஒட்டிய காமெடிகளுக்கு ஐ டேக் ஏ பவ் ( I take a bow)" என்று சொல்ல வைத்திருக்கிறது.

அது மதிய உணவு இடைவேளை நேரமாக இருக்கட்டும்... இல்லை, மனம் வருந்திப் போய் ஒரு தேறுதல் தேடும் காலமாக இருக்கட்டும் டான் சீனு, ராஜா தி கிரேட், டிஸ்கோ ராஜா போன்ற டப்பிங் படங்கள் ரிபீட் மோடில் வந்தாலும் கூட ஒரு ஃபீல் குட் உணர்வை தந்து செல்வதாக இருக்கின்றன ரவிதேஜா படங்கள். இப்படியாக சுந்தரத் தெலுங்கில் எடுக்கப்பட்ட படங்களின் டப்பிங் பிரதிகளின் மீதான நேசம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

போலி கற்பிதங்களை உடைத்ததற்காக I Take a Bow: ஒரு நடிகர் என்றால் முகம் செதுக்கி வைத்தார்போல் திருத்தமாக, ஆணழகனாக மிடுக்காக இருக்க வேண்டும். நடிகை என்றால் 36 - 24 - 36 சைஸில் ஹவர் க்ளாஸ் போல் இருக்க வேண்டும் போன்ற போலியான அழகுக் கற்பிதங்களுள் இந்த ஜிகினா உலகில் நிறைய உண்டு. அதை உடைத்துத் தகர்த்தவர்களும் உண்டு. டார்க் இஸ் ப்யூட்டிஃபுல் என்று நிரூபித்த நடிகர்கள் நம் தமிழ் சினிமா வசமும் உண்டு. அப்படியாக அதென்ன கனகச்சித அழகு என்று தகர்த்தவர்கள் தமிழில் மட்டுமல்ல வெவ்வேறு மொழிகளிலும் உண்டு. அந்தப் புரிதலோடு நம் அண்டை மாநிலத்தை எட்டிப் பார்த்தால் கற்பிதங்களை நொறுக்கி மாஸ் காட்டி நிற்கிறார் ரவிதேஜா. அவர் அங்கு 'ஸ்டைல் ஐகான்' அல்ல. ஆனால் அவர் தான் 'மாஸ் மஹாராஜா'.

இந்த அந்தஸ்து மந்திரத்தில் கிடைத்ததல்ல உழைப்பினால் அவரே விளைவித்துக் கொண்ட கரிஷ்மா! அவருடைய டயலாக் டெலிவரி ஆக இருக்கட்டும், காமெடியில் ஸ்க்ரீன் பிரசன்ஸ் காட்டுவதாக இருக்கட்டும் எல்லாமே காட்சிகளோடு கனக்கச்சிதமாகப் பொருந்திப் போகும். இதுவரை நான் பார்த்த ரவிதேஜா படங்களின் சண்டைக் காட்சிகளும்கூட ஒருசில தெலுங்குப் படங்களில் இருப்பதுபோல் அபத்தமாக இல்லாமல் லாஜிக் விதிமீறல்கள் சிறு அளவில் இருந்தாலும்கூட ஓகே என்று கடந்து செல்லும் வகையில்தான் இருந்திருக்கின்றன.

ஒரு நாயகன் உதயமாகினான்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களை மொழி எல்லைகள் கடந்து குவித்து வைத்திருக்கும் ரவிதேஜா கடந்து வந்த பாதை அத்தனை எளிதானதாக இல்லை. ஒரு நாயகனாக உதயமாகும் முன் ரவிதேஜா உதவி இயக்குநர், துணை கதாபாத்திரங்கள் எனப் பல களங்களைக் கண்டிருக்கிறார்.

சிறுவயதில் தனது தந்தையின் பணி நிமித்தமாக வட இந்தியா, ராஜஸ்தான் என்ற பல மாநிலங்களுக்கு மாறுதலாகிச் சென்றிருக்கிறார். அதனாலேயே ரவி தேஜாவுக்கு இந்தி மொழி பழக்கத்துக்கு வந்தது. கூடவே மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பாலிவுட்டின் டான்ஸிங் மஹாராஜா கோவிந்தா மீது தீராக் காதலும் வந்தது. பின்னாளில் ரவிதேஜா ஒரு பிரபல நட்சத்திரமாக அளித்த பேட்டியில் தனக்கு நடனத்தின் மீது ஈடுபாடு வருவதற்கு கோவிந்தாதான் காரணம் என்று கூறியிருப்பார். ரவிதேஜாவின் படங்களை லயித்துப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோவிந்தாவின் நடிப்பு சாயல் தெரிந்ததுண்டு. அந்தப் பேட்டியைப் பார்த்தபின்னர் அந்த கனெக்‌ஷன் உறுதியானது.

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கலையார்வத்தோடு சினிமாவில் தடம் பதிக்க ரவிதேஜா முதலில் தடம் பதித்தது சென்னையில்தான். கன்னட படம், தெலுங்குப் படங்களில் சைட் ரோல் எனப்படும் சிறிய வேடங்களில் வந்து சென்றவர் பின்னர் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினார். கிருஷ்ண வம்சியின் நின்னே பெல்லடாடா படத்தில் ரவி தேஜாவுக்கு ஒரு ரோல் கொடுத்தார். நாகர்ஜுனா நாயகனாக நடித்த அந்தப் படம் தேசிய விருது பெற்றது. அதில் ரவி தேஜாவின் கேரக்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது. பூரி ஜெகநாத்தின் இட்லு ஸ்ரவாணி சுப்ரமணியம் ஒரு படம் ரவி தேஜாவை வசூல் ராஜாவாக மாற்றியது.

வாரிசுகளுக்கு மத்தியில் மிளிரும் ஒன் மேன்... - தெலுங்கு சினிமாவில் வாரிசுகளுக்கு மிகப் பெரிய அந்தஸ்தும் அதிகாரமும் உண்டு. வாய்ப்புகளுக்காக உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டியதில்லை, கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கவும் தேவையில்லை. தயாரிப்பாளர்கள் முதலீடு செய்யத் தயாராகவும், இயக்குநர்கள் காஸ்டிங் செய்ய ஆயத்தமாகவும் வரிசை கட்டி நிற்க வாரிசுகள் தான் சூஸ் தி பெஸ்ட் செய்ய வேண்டியிருக்கும். இந்நிலையில் சினிமாவில் எவ்வித் பின்னணியும் இல்லாமல், சினிமா வகுத்தவைத்த கற்பிதங்கள் இல்லாமல் பூபதி ராஜு ரவி ஷங்கர் ராஜு இன்று ரவி தேஜாவாக மின்னிக் கொண்டிருக்கிறார்.

இன்று இரண்டு இலக்க கோடிகளில் சம்பளம் வாங்கும் அவர் தயாரிப்பாளர்களுக்கு வசூல் கேரண்டி நடிகர். டப்பிங் படங்களை எடுப்பவர்களுக்கும் ரவிதேஜா மார்க்கெட் ரிஸ்க்குக்குள் தள்ளிவிடாத நட்சத்திரமாக இருக்கிறார். குழந்தைகள் இமிடேட் செய்யும் நாயகராக, ஃபேமிலி என்டெர்டெய்னராக, தயாரிப்பாளராகவும் தன்னை நிறுவியிருக்கிறார். இவையெல்லாம் நிச்சயமாக ஒரு அப்ளாஸுக்கு உகந்த விஷயங்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in