

மதுரை: அரசியல் கட்சிகளில் நிர்வாகிகளை விட, தேர்தலின்போதும், கட்சி மாநாடுகளிலும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் அடிமட்டத் தொண்டர்கள்தான் ஆணிவேர். தலைவர்கள் மேடைகளில் பேசும்போது, உண்மைத் தொண்டர்களை ரத்தத்தின் ரத்தமே, உடன் பிறப்பே எனப் புகழாரம்சூட்டி மகிழ்வர். தலைவர்கள் மாறினாலும், கொள்கைப் பிடிப்பிலும், தான் ஏற்றுக் கொண்ட கட்சியில் இருந்து எந்தச் சூழலிலும் கடைசிவரை தொண்டனாகவே இருந்து, லட்சோப லட்சம் பேர் விசுவாசமாக இருப்பர்.
அதை மெய்ப்பிக்கும் விதமாக, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையைச் சேர்ந்த இப்ராகிம் (55) என்பவர் தனது சைக்கிளில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடனும், கட்சியின் சின்னத்துடனும் வலம் வருகிறார்.
இது பற்றி அவர் கூறியதாவது: மதுரை கணேஷ் திரையரங்கம் அருகே வசிக்கிறேன். எனக்கு 2 மகன்கள், ஒரு மகள். 3 பேருக்கும் திருமணம் முடிந்து பேரன், பேத்திகள் இருக்கின்றனர். சமீபத்தில்தான் மனைவி உயிரிழந்தார். மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் தினக்கூலியாக இருக்கிறேன். மீன்கள் வந்தால் ரூ. 500 சம்பளம், வராவிட்டால் ஓனர் செலவுக்கு ரூ.200 தருவார்.
மற்ற நேரங்களில் அண்ணாநகர் பகுதியில் பிளாட்பாரத்தில் சைக்கிள் ரிப்பேர் பார்ப்பேன். சொற்ப வருவாய் வந்தாலும் அரசியல் ஈடுபாடு சிறு வயதில் இருந்தே உண்டு. ஆரம்பத்தில் இருந்தே அதிமுக தொண்டன் என்ற நிலையில் இருந்து எப்போதும் மாறவில்லை. எம்ஜிஆருக்கு, பிறகு ஜெயலலிதா அதிமுக தலைவி ஆன பிறகு முதன் முறையாக தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தினார்.
அக்கூட்டத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து சைக்கிளில் சென்றேன். அப்போது, எனது சைக்கிளில் இரட்டை இலை சின்னம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்துடன் சென்றேன். அது முதல் கட்சிக் கொடியுடன், இருவரின் புகைப்படங்களுடன் மதுரையில் சுற்றி வருகிறேன். கட்சியினரின் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பேன்.
யாரிடமும் பதவி கேட்டு போய் நின்றதில்லை. மீனவரணியில் பொறுப்பு தருவதாக கூறினர். அது கிடைக்கவில்லை. ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..’ என எம்ஜிஆரும், ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்..’ என ஜெயலலிதாவும் சொன்ன மந்திர வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எந்த சூழலிலும், எம்ஜிஆர் கண்டெடுத்த, ஜெயலலிதா வளர்த்த இரட்டை இலை எங்கே இருக்கிறதோ அந்தப் பக்கம்தான் நிற்பேன். சிலர் எனது சைக்கிளை பார்த்து கேலி செய்வர். அது பற்றி எனக்கு கவலை இல்லை. சைக்கிளில் பெட்ரோல் போட வேண்டியதில்லை. சுற்றுச்சூழல் , உடலுக்கும் ஆரோக்கியம் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கச் சென்றால் எம்.ஜி.ஆரின் உண்மையான பக்தன் என்று என்னை ஆரவாரமாக வரவேற்பர். அப்போது பெருமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.