

மதுரை: தற்போது டிஜிட்டல் யுகத்தில் கண்களைக் கவரும் அழகழகான ஓவியங்கள் வந்து விட்டாலும், பாரம்பரியமாக கைகளால் வரையப்படும் ஓவியங்கள், கார்ட்டூன்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு.
அந்தவகையில் கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நட்சத்திர விடுதிகள் , விமான நிலையம், ரயில் நிலையம் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஓவியங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், மதுரை ஜெய் ஹிந்த் புரம் தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் எம்ஏ. தங்கராஜு பாண்டியன் என்பவர், மதுரையின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக திருவிளையாடல் புராணத்தில் உள்ள 64 திருவிளையாடல்களை அஞ்சல் அட்டையில் தத்ரூபமாக வரைந்து ஆவணப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போது, ஆசிரியர்களிடம் இருந்தும், ஆன்மிகம், இயற்கைச் சூழலால் ஈர்க்கப்பட்டும் ஓவியம் வரையத் தொடங்கினேன். அந்த வகையில், மதுரைக்கு நெருங்கிய தொடர்புடைய திருவிளையாடல் புராணத்தில் சிவனின் 64 திருவிளையாடல் காட்சிகளை அஞ்சல் அட்டைகளில் வரைந்து ஆவணப்படுத்தி உள்ளேன்.
தற்போது அஞ்சல் அட்டைகளில் தகவல் பரிமாற்றம் குறைந்து விட்டது. இதுதொடர்பாக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அதைத் தேர்வு செய்தேன். இவை தவிர, விசிட்டிங் கார்டு பின்பகுதி, தேங்காய் சிரட்டையில் ஓவியம், தத்ரூப மனித உருவம், ஆயில் பெயின்டிங், வண்ண ஓவியங்கள், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவற்றையும் வரைவேன்.
ஓவியம் வரைந்தால் மனநிலை ஒருமுகப்படும். தீய எண்ணங்கள் வராது. பிறர் நமது ஓவியங்களை ரசிப்பதால் நமக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். நவீன டிஜிட்டல் ஓவியங்களை விட கைகளால் தத்ரூபமாக வரையும் ஓவியங்களையே பலரும் விரும்புகின்றனர். தங்களது புகைப்பட ஓவியங்களை வீடு, வர்த்தக நிறுவனங்களில் தொங்க விட ஆசைப்படுகின்றனர்.
ஆன்மிகம், இயற்கைச் சூழல், மனித உருவம் என பல்வேறு நிலைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன. செல்போன்கள், சமூக வலைத்தளம் என கவனச் சிதறல்கள் அதிகரித்துள்ள இக்கால கட்டத்தில், அலைபாயும் மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் ஓவிய வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.