Published : 19 Jun 2023 04:18 AM
Last Updated : 19 Jun 2023 04:18 AM

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு: வரலாற்று ஆய்வு நடுவம் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தாக கூறப்படும் சோழர் கால கல்வெட்டு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட தொல்லியல் ஆலோசகர் வெங்கடேசன், வரலாற்று ஆய்வு நடுவம் நிர்வாகிகள் த.ம.பிரகாஷ், பால முருகன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் 3 புதிய சோழர் கால கல்வெட்டுகள் கண் டெடுக்கப்பட்டன. விருத்தக் குமுதப் பகுதியில் உள்ள கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை.

28-வது ஆட்சியாண்டு வாணகோப்பாடி பெண்ணை வடகரை வயிரமேக சதுர்வேதி மங்கலத்து சபையார், திருவண்ணாமலை அண்ணா மலையாருக்கு, கோயிலில் உள்ள பண்டாரமான கருவூலத்தில் இருக்கும் பொன் முதலானவற்றில் கிடைக்கும் வட்டியில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடத்துவது குறித்து குறிப்பிடப் பட்டுள்ளது.

இது துண்டு கல் வெட்டு என்பதால் மற்ற விவரம் அறியப்பெறவில்லை. மற்றொரு துண்டு கல்வெட்டில் ஒப்பந்தங்களாக சில குறிப்புகள் உள்ளன. தினசரி வழிபாட்டிக்கு ஒரு கலம் நெல்லும், 3 குறுணி அரிசியும் வழங்க வேண்டும், மற்றொரு ஒப்பந்தமாக உணவு படைத்தலின் போது நான்கு நாழி நெய் வழங்க குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பண்டாரத்தில் வைப்பாக உள்ள ஒரு கழஞ்சு பொன்னும், அதில் இருந்து வரும் வட்டியைக் கொண்டு நடத்திட வேண்டும். இந்த கல்வெட்டில் உள்ள ஜகதி என்ற உறுப்பில் பல அழகிய சோழர் கால குறுஞ்சிற்பங்கள் உள்ளன. அவை கஜசம்ஹார மூர்த்தி, மார்கண்டேயன் சிற்பம் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. இக்கல் வெட்டு, முதலாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதே பகுதியில் மற்றொரு துண்டு கல்வெட்டு கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை உடைய தேவர்க்கு, செட்டியாகிய சதூரான பெருந்தச்சனுக்கு வைச்சபூண்டி நிலமாவது என்றும், புடவை செய்து கொடுத்தோம் என்றும், அண்ணாநாட்டு திருவண்ணாத்து செம்பியன்மகாதேவி நகரீஸ்வரம் கோயில் என்றும், பெரிய செறுவு காணிக்கையாக செய்து கொடுத்தேன் இம்மடமுடைய என்று கல்வெட்டு வரி கிடைக்கிறது. இதில் சிறப்பு வாய்ந்த ஒரு செய்தி புலப்படுகிறது.

5-வது வரியில் அண்ணாநாட்டு திருவண்ணாத்து செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் ஸ்ரீ கோயில் என்ற தொடரில் இருந்து, இக்கோயிலில் சோழ அரசி செம்பியன் மகாதேவியார், திருவண்ணாமலைக்கு அருகில் அல்லது இக்கோயிலில் தனது பெயரில் செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் என்ற கோயிலை அமைத்த செய்தி கிடைக்கிறது. இந்த கோயில், தற்போது எங்குள்ளது என்பது குறித்து அறியமுடியவில்லை.

நகரீஸ்வரம் என குறிப்பிடுவது திருவண் ணாமலையை குறிப்பதாக கருத இடம் உள்ளது. 9, 10-ம் நூற் றாண்டிலேயே திருவண்ணாமலை என்பது நகர் மயமான ஒரு ஊராக இருந்திருக்கும் என அறியலாம். இக்கல்வெட்டின் காலம் 10-ம் நூற்றாண்டின் மைய பகுதியாக இருக்கலாம். கல்வெட்டுகளை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x