Published : 15 Jun 2023 02:51 PM
Last Updated : 15 Jun 2023 02:51 PM
உத்தராகண்ட் மாநிலத்தின் மலைப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் அரசு மருத்துவ அதிகாரி பொறுப்பில் இருந்து மக்கள் சேவை செய்து வருகிறார் அரவிந்தன் ஆனந்த ஜோதிகுமார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுகுப் பிறகு அந்த மலைக் கிராமத்துக்கு பணிக்கு வந்த மருத்துவர் இவர்தான் என்பதே கவனத்துக்குரியது.
திருச்சியில் எளிமையான குடும்பத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர் அரவிந்தன் ஆனந்த ஜோதிகுமார். சில தனிப்பட்ட பிரச்சனைகளால் ஊரில் இருந்த இடங்களை விற்று விட்டு பிழைப்புக்காகக் குடும்பத்துடன் சென்னை வந்துக் குடியேறியுள்ளனர். இவர் அப்பா தினக் கூலி. பாக்கு, புகையிலை வியாபாரம் செய்து தனது பிள்ளைகளை சென்னையில் படிக்க வைத்து வந்தார். உடன்பிறந்தவர்கள் இருவர். அரவிந்தன்தான் இவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி.
சென்னை சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துப் பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற அரவிந்தனின் இளமைக் காலம் சவால்கள் நிறைந்தது. வறுமையின் பிடியில் சிக்கிய அவரது குடும்ப தேவைகளுடன் தனது கனவுகளையும் சேர்ந்தே அவர் சுமந்தார். எனினும் தனது தேடலை அரவிந்தன் கைவிடவில்லை. அவரின் கடின உழைப்பினால் பல் மருத்துவராக பட்டம் பெற்றார்.
இதன்பின்னர் அரவிந்தனின் பயணம் ஆரம்பமானது எனக் கூறலாம். மருத்துவப் பட்ட படிப்பை முடித்த அரவிந்தனுக்கு உத்தராகண்ட் மலைக் கிராமத்தில் பணி நியமனம் கிடைத்துள்ளது. அதுவும் 17 வருடங்கள் எந்த மருத்துவரும் இல்லாத கிராமத்தில் அவரது முதல் மருத்துவப் பயணம் ஆரம்பித்தது. அரவிந்தனிடம் பேசும்போது அவர் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, “என் சக கல்லூரி மாணவர்களுக்கே என் கடந்த காலத்தை நான் அதிகம் விளக்கியதில்லை.
சுமார் 22 ஆண்டுகள் பீடி, புகையிலைகளை என் தந்தை விற்றுவந்தார். என் அப்பா கூலி வேலைதான் செய்கிறார் என்பதை பிறரிடம் கூற தயங்கியதுண்டு. பாக்கு போடாதீங்க, சிகரெட் பிடிக்காதீங்க என இன்று பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்யும் நான்தான் என்னுடைய இளமைக் காலத்தில் அப்பாவுக்காக புகையிலை, பீடி, சிகரெட் போன்றவற்றை அசோக் பில்லர் வட்டார பகுதியிலும், காமராசர் சாலையிலும் சைக்கிளிலில் கடை கடையாக விநியோகித்து வந்தேன்.
கல்லூரி விடுமுறை நாட்களில் நான் புகையிலைப் பொருட்களை விற்பதை என் நண்பர்கள் யாரும் பார்த்துவிடக் கூடாது என பலமுறை மறைந்தது உண்டு. புகையிலைப் பொருட்களை விற்க தடை விதித்த காலங்களில், அப்பாவின் நண்பர்கள் வரை கைது செய்யப்பட்டதுண்டு. அப்பா கடைகளுக்கு விற்க முடியாமலும், கல்லூரி காலங்களில் எனக்கு கட்டணம் செலுத்த இயலாமல் திணறியதை என்னால் மறக்க முடியாது.
கிராமங்களில் இருந்து என் வயது சிறுவர்கள் டீ போட, பாத்திரம் கழுவ உதயம் தியேட்டர் ஓரக் கடைகளில் பணியமர்த்தப்படுவதைக் கண்ட பின்பே நாம் படித்தால்தான் இதிலிருந்து தப்ப முடியும் என அறிந்து என் சைக்கிளை வேகமாக மிதித்த நாட்கள் பலவுண்டு. என் அப்பா புகையிலை பொருட்களை விற்றே ஒரு மருத்துவரையும், ஒரு முதுகலை இன்ஜினியரையும், ஒரு ஆடிட்டரையும் உருவாக்கி இருக்கிறார். இப்போது என் அப்பா கூலித் தொழிலாளி என்று கூற எனக்கு தயக்கம் இல்லை.
உண்மையில், கல்விதான் எங்கள் ஏழ்மையை விரட்டிய ஆயுதம். படிச்சி டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன் என்று பல ஸ்கூல் டாப்பர் சொல்லி கேள்விபட்டு இருப்பீங்க, நானும் அன்று அப்படிச் சொன்னேன். அதையே இப்போது செய்துகொண்டிருக்கிறேன்.
மருத்துவப் பணியிட தேர்வில் நான் உத்தராகண்டுக்கு மருத்துவராக அனுப்பப்பட்டேன். நேர்முகத் தேர்வில், என்னை எந்த இடத்தில் வேண்டுமானாலும் மருத்துவராக போடுங்க, நான் ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்றே சொன்னேன். நான் கூறியபடியே அதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. நான் முதல் முதலில் மருத்துவராக பணிக்கு சென்றது உத்தராகண்டில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியை ஒட்டிய ஒரு சின்ன கிராமம்.
தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் கூட ஒரு கிலோமீட்டர் சரிவான மலைப் பாதையில் நடந்தேதான் செல்ல வேண்டும். அங்கு நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் செல்வது கடினம். இன்று வரை அங்கு போக்குவரத்து வசதி இல்லை. மின்சாரம் இருந்தும் அவ்வப்போது மின்சாரத் தடை ஏற்படுவது வழக்கம். இப்படி அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்தில்தான் என் நாட்கள் ஓடியது. இரவில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் 6 மணிக்கு மேல் வெளியே வரவே முடியாது. என்னை விட என் அம்மாவுக்கு பயம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அம்மாவிடம் போனில் பேசுவேன். சென்னையில் இருந்து வந்த எனக்கு இது எல்லாம் பழகுவதற்கு சிரமமாகவே இருந்தது. ஆனால் இயற்கையோடு வாழும் மலைக் கிராம மக்களின் வாழ்க்கையை ரசிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 2018-ல் தொடங்கி இன்று வரை கிராம மக்களின் நலனில் அக்கறையுடன் என் மருத்துவப் பணியை செய்து வருகிறேன்.
இதற்கிடையே, கரோனா தொற்றுத் தீவிரமாக பரவிய காலங்களில் அங்குள்ள நகரத்தில் கரோனா வார்டு டியூட்டியில் என்னை போட்டார்கள். அது மிகவும் கடினமான நாட்களாகவே இருந்தது. ஒரு வழியாக பல துயரங்களுக்கு இடையே அதையும் கடந்து வந்தேன். அதன்பின் இப்போது மலைக் கிராம மக்கள் தங்கள் வீட்டில் ஒருவனாகவே என்னைப் பார்க்கிறார்கள்.
பல மாதங்களாய் மெரினா கடலை என்னால் காண முடியவில்லை. ஆனால், இங்குள்ள மக்களின் அன்புக் கடலை கண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கடந்த ஐந்து வருடங்களாக இங்குதான் பணி செய்து வருகிறேன். இங்கு வேலை செய்துகொண்டே இப்போது சண்டிகரில் முக தாடை அறுவை சிகிச்சை நிபுணருக்கும் படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஒன்றரை ஆண்டில் இந்தப் படிப்பையும் முடித்து விடுவேன்.
என்னுடைய வருங்கால கனவு எல்லாம்... இந்த மலைக் கிராம மக்களோடு சில காலம் வாழ்ந்துவிட்டு, நல்ல மருத்துவத்தை அவர்களிடம் கொண்டு சென்றபின், திரும்பத் தமிழ்நாட்டுக்கு திரும்பி நம் கிராமங்களிலும் வேலை செய்ய வேண்டும். தன்னார்வ நிறுவனம் ஆரம்பித்து இலவசக் கல்வி மற்றும் இலவச அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும். இவற்றை பெரிய அளவில் இல்லை என்றாலும் என்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி எடுப்பேன்.
ஆரம்பத்தில் கல்லூரி படிக்கும்போதே நான் அசோக் நகரில் பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்பில் உயிரியல் பாடங்கள் எடுத்துள்ளேன். இலவச சிகிச்சைகள் செய்வதும், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதும் என என் வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். இதுதான் என் எதிர்கால திட்டங்கள்”. என்றார் உத்வேகத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT