Last Updated : 07 Jun, 2023 02:53 PM

 

Published : 07 Jun 2023 02:53 PM
Last Updated : 07 Jun 2023 02:53 PM

கைதிகளின் மறுவாழ்வு மையமாக மாறிய மதுரை மத்திய சிறை

பிரிசன் பஜார் விற்பனையகத்தில் ஆயத்த ஆடைகளை பார்வையிடும் போலீஸார். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மத்திய சிறை வளாகம் சிறைத்துறை உயர் அதிகாரிகளின் முயற்சியால் கைதிகளின் மறுவாழ்வு மையமாக மாறியுள்ளது. மதுரை மத்திய சிறை வளாகம் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1865-ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் என, சுமார் 1800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளுக்கு தண்டனை அளிக்கும் இடமாக இன்றி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மையமாக தற்போது மதுரை மத்திய சிறை மாறி இருக்கிறது.

தண்டனைக் கைதிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் சிறை நிர்வாகம் சார்பில், கணினி மற்றும் பேக்கரி பொருட்கள், சுங்குடி சேலை, கைலி, பெண் கைதிகள் மூலம் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், சுடிதார், நைட்டி, வயர் கூடை, வத்தல் பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து உற்பத்தி செய்கின்றனர்.

கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் பொது மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கும் விதமாக சிறை அங்காடி (பிரிசன்-பஜார் ) என்ற திட்டத்தை சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி மேற்கொண்டார். இதன்படி, சிறை அங்காடி எனும் விற்பனை நிலையம் சிறையின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக் கண்ணன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

விற்பனையகத்தில் ஆயத்த ஆடைகளை பார்வையிடும் பெண் காவலர்.
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

இந்நிலையில், சிறைப் பொருள் விற்பனை நிலையம் கடந்த மாதம் 26-ம் தேதி திறக்கப்பட்டது. மதுரை சிறையில் இருந்து சுங்குடி சேலை, கைலிகள், ரெடிமேட் சட்டைகளும், பேக்கரி பொருட்களும், பெண் கைதிகள் மூலம் குழந்தைகளுக்கான விளையாட்டு, சுடிதார், நைட்டிகள், வயர்கூடை, வத்தல் பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

மேலும் கடலூர் , கோவை, சிங்காநல்லூர் திறந்தவெளி சிறை உட்பட தமிழகத்திலுள்ள 10 சிறைகளிலும் கைதிகள் தயாரிக்கும் எண்ணெய் பொருட்கள், போர்வை, காவலர்களுக்கான சீருடை, தொப்பி, இட்லி, பருப்புப் பொடி, ஊறுகாய், தின்பண்டங்கள், வத்தல் போன்ற உணவுப் பொருட்களும் வரவழைத்து விற்க தொடங்கி உள்ளனர். மேலும், காலை சிற்றுண்டியாக இட்லி, தோசை, பொங்கல் மற்றும் காபி, டீயும், மதிய சாப்பாடு விற்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், ‘ மதுரை சிறை அங்காடியில் சுத்தம், சுகாதாரமிக்க உணவு பொருட்கள் கிடைக்கின்றன. விலையிலும் நியாயமாக இருக்கிறது. தண்டனைக் காலம் முடிந்து செல்லும் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்' என்றனர்.

மதுரை மத்திய சிறை டிஐஜி பழனி கூறியதாவது: மதுரை சிறையில் தகுதியான தண்டனைக் கைதிகளை தேர்ந்தெடுத்து, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இதன்படி, பேக்கரி உற்பத்தியில் 12 பேரும், ஹோட்டல் உணவு தயாரிக்க 7 பேர், ஓட்டல் நிர்வாகப் பணிக்கு 10 பேர் மற்றும் துணிகளை தோய்க்கும் பிரிவில் 2 பேர், நர்சரியில் 3 பேர் என 40-க்கும் மேற்பட்டோர் உற்பத்தி பிரிவில் பணி புரிகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் தேவைக்கேற்ப 1,700 ரொட்டி பாக்கெட்டுகளை தயாரித்து அனுப்புகிறோம். மதுரை சிறை அங்காடி மூலம் தினமும் ரூ. 50 முதல் ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை நடக்கிறது. மதுரை மட்டுமின்றி பிற சிறைகளில் தயாரிக்கும் பொருட்களும் இங்கு கொண்டு வரப்படுகிறது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடும் கைதிகளுக்கு போதிய வருவாயும் கிடைத்து, அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x