

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியதைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே, துள்ளிக் குதித்து கொண்டாடினார். ஜந்தர் மந்தரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிஜேபி அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 20-ம் தேதி மாணவர்கள் நடத்திய பேரணியின் போது, சிலர் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
அத்துடன் போலீஸ் வாகனங்கள் கவிழ்க்கப்பட்டன. செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர்கள் உட்படபலரை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சூழ்ந்து கொண்டு கேலி,கிண்டல் செய்தனர். கும்பலைக் கலைக்க போலீஸார் தடியடிநடத்தினர். இதைத் தொடர்ந்தும் போராட்டம் நீடித்து வந்தது.
இந்நிலையில் சிஜேபி அமைப்பினர் விடுத்த கோரிக்கையின்படி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.அவரது ராஜினாமா அறிவிப்பு வெளியானதும் மைதானத்தில் இருந்த சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்.
வெற்றியைக் கொண்டாடும் வகையில் கையை உயர்த்தி,இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிஜேபி கட்சியினர், மாணவர்கள், இளைஞர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அபிஜித் திப்கே கூறியதாவது: நீ பணிய வைக்கும்போது உலகமும் பணியும். மத்திய அமைச்சரின் ராஜினாமா எளிதில் வரவில்லை. நாம் போராடியதால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தால் யாருடைய வாழ்க்கையும், எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டதோ, அந்த மாணவர்கள்தான் இந்த வெற்றிக்கு காரணம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நீட் வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாக அப்போது அபிஜித் திப்கே வாசித்தார். பின்னர், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கட்சித்தலைமை அறிவித்ததை அடுத்து, ஜந்தர் மந்தரில் இருந்து அனைவரும் கலையத் தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, ஜந்தர் மந்தர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இணைய சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. சிஜேபி போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் நிலையங்களும் நேற்று மாலை திறக்கப்பட்டன. இதனால், டெல்லியில் கடந்த 35 நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியது.