15 அடி ஆழ பள்ளத்தில் பைக்குடன் விழுந்த இளைஞர் உயிரிழப்பு: டெல்லியில் துயர சம்பவம்

15 அடி ஆழ பள்ளத்தில் பைக்குடன் விழுந்த இளைஞர் உயிரிழப்பு: டெல்லியில் துயர சம்பவம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியின் ஜனக்புரி பகுதியில் டெல்லி ஜல் போர்டு சார்பில் வெட்டப்பட்ட 15 அடி ஆழ பள்ளத்தில் பைக்குடன் விழுந்த 25 வயது இளைஞர் கமல் தியானி உயிரிழந்தார். அவரை காணவில்லை என அவரது உறவினர்கள், நண்பர்கள் இரவு முழுவதும் தேடிய நிலையில் நேற்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.

டெல்லியில் உள்ள கைலாசபுரியை சேர்ந்தவர் கமல். அங்குள்ள ரோஹினி பகுதியில் அவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு ரோஹினியில் இருந்து தனது வீட்டுக்கு அவர் புறப்பட்டுள்ளார். இடையில் தனது நண்பருடன் பேசிய அவர், ‘இன்னும் 15 நிமிடத்தில் வீடு வந்து சேர்வேன்’ என தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஜனக்புரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு சொல்லி உள்ளனர். ஆனால், அதை காவல் துறையினர் செய்யத் தவறியதாக தகவல். அதே நேரத்தில் இரவு முழுவதும் அவரை காணவில்லை என தேடியுள்ளனர். அவரது மொபைல்போனுக்கு பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் ஜனக்புரி பகுதியில் உள்ள 15 அடி ஆழ பள்ளத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார், உயிரிழந்த இளைஞர் கமல் என்பதை அடையாளம் கண்டனர். இந்த சூழலில் கமல் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டை டெல்லி போலீஸார் மறுத்துள்ளனர்.

இந்த துயர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் ராஜேஷ் பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட டெல்லி ஜல் போர்டு ஊழியர்கள் சிலர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

15 அடி ஆழ பள்ளத்தில் பைக்குடன் விழுந்த இளைஞர் உயிரிழப்பு: டெல்லியில் துயர சம்பவம்
யு19 உலக சாம்பியனான இந்திய அணிக்கு ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in