

புதுடெல்லி: எக்ஸ் தளத்தில் உள்ள ‘க்ரோக்’ ஏஐ செயலி மூலம் பெண்களின் படத்தை ஆபாசமாக மாற்றி சிலர் வெளியிடுவதாகவும், இது போன்ற குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை எம்.பி பிரியங்கா சதுர்வேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடந்த மாதம் 29-ம் தேதி கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தை எக்ஸ் தளத்தின் கவனத்துக்கு மத்திய அரசு கடந்த 2-ம் தேதி கொண்டு சென்றது. உள்நாட்டு சட்ட விதிமுறைகளை மீறி ஆபாச படங்கள், வீடியோக்கள், சட்டவிரோத தகவல்கள் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இவற்றை நீக்கி போலி கணக்குகளை எக்ஸ் தளம் முடக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது.
இது தொடர்பாக விரிவான அறிக்கையை 72 மணிநேரத்துக்குள் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. இதையடுத்து எலான் மஸ்க் மற்றும் எக்ஸ் தளம் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியதாவது:
எக்ஸ் தளத்தில் ‘க்ரோக்’ ஏஐ செயலியை பயன்படுத்துபவர்கள் சட்டவிரோத தகவல்கள் மற்றும் படங்களை பதிவேற்றம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சட்டவிரோத தகவல்கள், படங்கள், வீடியோக்களை பதிவேற்றும் செய்பவர்களின் கணக்குகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும். இவ்வாறு எக்ஸ் தளம் கூறியுள்ளது.