

திஸ்பூர்: அசாமின் குவாஹாட்டி நகரில் ஜவுளி துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: “இந்தியாவின் ஜவுளித் துறை: வளர்ச்சி, பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தை நெய்தல்” என்ற கருப்பொருளுடன் ஜவுளித் துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டை மத்திய ஜவுளி அமைச்சகம், அசாம் மாநில அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவை ஒரு உலகளாவிய ஜவுளி உற்பத்தி மையமாக நிலைநிறுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த தேசிய உத்தி குறித்து விவாதிப்பதற்காக மத்திய, மாநில ஜவுளித் துறை அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளை ஒன்றிணைப்பதை இந்த மாநாடு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
350 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளித் துறையை உருவாக்குவது, 2030-க்குள் 100 பில்லியன் டாலர் ஜவுளி ஏற்றுமதி இலக்கை எட்டுவது போன்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப விவாதங்கள் நடைபெற உள்ளன.
தொடக்க அமர்வில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.