

பெங்களூரு: உலகளவில் புகழ்பெற்ற ‘டைம் அவுட்’ நிறுவனம், ‘இன்ட்ரெபிட் டிராவல்’ அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2026-ம் ஆண்டுக்கான ‘உலகின் சிறந்த 20 இரவுப்பொழுது நகரங்கள்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு, 17-ம் இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் உணவு மற்றும் கலாச்சாரத்துக்காக பெங்களூரு ஏற்கெனவே 13-ம் இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது இரவுக் கலாச்சாரத்திலும் உலக வரைபடத்தில் இடம்பிடித்துள்ளது.
இரவுப் பொழுது அமைப்புகளின் தரம், பாதுகாப்பு, கட்டண மலிவு, சமூகக் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் சர்வதேச வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், பாரம்பரியமான நடனக் கூடங்களைத் (நைட்கிளப்ஸ்) தாண்டி, நேரலை இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை மன்றங்கள், கிராஃப்ட் பியர் விடுதிகள், கலை நயம்மிக்க காக்டெய்ல் பார்கள் மற்றும் பாப் கஃபேக்கள் அடிப்படையில் பெங்களூரு 17-ம் இடம் பிடித்துள்ளது. அதேநேரம் நாட்டின் தலைநகரான டெல்லி, வர்த்தக தலைநகரான மும்பை ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் உலகின் முதன்மை இரவுப் பொழுது நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பெர்லின் 2-ம் இடத்தையும், அமெரிக்காவின் நியூயார்க் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளன. மெல்போர்ன் (ஆஸ்திரேலியா) மற்றும் சாவ் பாலோ (பிரேசில்) ஆகிய நகரங்கள் முறையே 4 மற்றும் 5-ம் இடங்களைப் பிடித்துள்ளன.