

கனகோனா: தெற்கு கோவாவில் உள்ள சமஸ்தான் கோக்ரன் ஜீவோத்தம் மடத்தில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இது உலகின் மிக உயரமான ராமர் சிலை ஆகும்.
கோவா மாநிலத்தின் தெற்கு கோவா மாவட்டத்தில் கனகோனா என்ற இடத்தில் உள்ள பர்தாகால் கிராமத்தில் சமஸ்தான் கோக்ரன் ஜீவோத்தம் மடம் 370 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு 77 அடி உயரத்தில் ராமரின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பிரம்மாண்ட சர்தார் வல்லபபாய் படேல் சிலையை (ஒற்றுமை சிலை) உருவாக்கிய பிரபல சிற்பி ராம் சுதர் இந்த ராமர் சிலையை உருவாக்கினார். இது உலகின் மிகப் பெரிய ராமர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மடத்தில் உள்ள கோயிலிலும் பிரதமர் மோடி வழிபட்டார்.
தெற்கு கோவாவில் அமைந்திருக்கும் சமஸ்தான் கோக்ரன் ஜீவோத்தம் மடம் நாட்டின் பழமையான மடங்களில் ஒன்று. ஆன்மிகம், கலாச்சாரம், சமூக பணிகளை மேற்கொள்வதில் மிகவும் புகழ்பெற்ற மடம். இந்த மடத்தின் பாரம்பரிய விழா நேற்று முன்தினம் முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவை முன்னிட்டு இங்கு நாள்தோறும் 7,000 முதல் 10,000 பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.