‘டிட்வா’ புயல் காரணமாக சீற்றத்துடன் காணப்படும் பாம்பன் கடல் பகுதி. படம்: எல்.பாலச்சந்தர்
வடதமிழகம், புதுச்சேரியை நோக்கி நகர்கிறது ‘டிட்வா’ புயல்: 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்
சென்னை: இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், இலங்கை திரிகோண மலையில் இருந்து தென்மேற்கே சுமார் 40 கி.மீ., சென்னையில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது வடமேற்காக நகர்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளைக் கடந்து நவ.30 (நாளை) அதிகாலை வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழகம் - புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.
இதன் காரணமாக வட தமிழகத்தில் இன்றும், நாளையும் (நவ.29, 30) பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதர கடலோர மாவட்டங்களில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை (‘ரெட் அலர்ட்’) பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்திலும், இதர வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 80 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில்கள் நிறுத்தம்: ‘டிட்வா’ புயலின் தாக்கத்தால் ராமேசுவரம் தீவு பகுதியில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பாம்பன் பாலத்தில் நேற்று ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, ராமேசுவரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரம் வரையும், விரைவு ரயில்கள் மண்டபம் வரையும் இயக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு விடுமுறை: இந்நிலையில், அதிகனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (நவ.29) விடுமுறை விடப்பட்டுள்ளது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
