

கர்னூல்: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தடியடி திருவிழாவில் பங்கேற்ற ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். நூற்றுக்கும் அதிகமானோர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், தேவரகட்டா பகுதியில் பல ஆண்டுகளாக இரு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ‘தடியடி திருவிழா’ எனும் பாரம்பரிய விழாவை நடத்தி வருகின்றனர். இதில் இரு கிராம மக்களும் இரவில் ஓரிடத்தில் கூடி, இரண்டு பிரிவினராகப் பிரிந்து விடுவர். இவர்களில், மலை மீதுள்ள அம்மன் சிலையை யார் கொண்டுபோய் தங்கள் கிராமத்தில் வைக்கிறார்களோ, அவர்களின் ஊரில்தான் அடுத்த ஆண்டு வரை அம்மன் சிலை இருக்கும்.
சிலையை மற்றொரு கிராமத்துக்குக் கொண்டு செல்ல விடாமல், கட்டை, கற்களால் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும் தடுப்பார்கள். விடிய விடிய நடைபெறும் இந்த விபரீத திருவிழாவில் பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரும் கலந்துகொள்வார்கள்.
தடியடி நடப்பதால் பலரது தலையில் பலத்த காயம் ஏற்படும். ஆயினும், அடுத்த ஆண்டும் இதே ஆக்ரோஷத்துடன் விழா நடைபெறும். இந்த விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும், ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கிக்கொள்வது மட்டும் மாறவில்லை. இம்முறை இவ்வாறு தாக்கிக்கொண்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கர்னூல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.