

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவுப் பெற்றது.
கடந்த 1-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் எஸ்ஐஆர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. இரண்டாவது நாளும் இதே நிலை நீடித்தது.
இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி எம்பிக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி வந்தே மாதரம் தேசிய பாடல் குறித்தும், எஸ்ஐஆர் குறித்தும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் விரிவான விவாதம் நடைபெற்றது.
குளிர்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் 12 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதா உட்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல மாநிலங்களவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த சூழலில் 15-வது நாளாக நாடாளுமன்றம் நேற்று கூடியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் வந்தே மாதரம் தேசிய பாடல் இசைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவைத் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் மக்களவையை ஒத்திவைத்தார். அவையின் செயல்பாடு 111 சதவீதம் என்ற உயர்ந்த அளவில் இருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதன்பிறகு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர்.
மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சர் அவையில் பதில் அளித்து கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தாள்களை கிழித்து எறிந்தனர். அவையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனினும் ஒட்டுமொத்தமாக மாநிலங்களவை அலுவல்கள் ஆக்கப்பூர்வமாக அமைந்தன. அவையின் செயல்பாடு 121 சதவீதமாக இருந்தது. அடுத்து வரும் கூட்டத்தொடர்களிலும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே அறிவித்தபடி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவுப் பெற்றது. அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி வரை இரு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெறும்.