

மும்பை: பாஜக தலைமையிலான மகா கூட்டணி, மும்பையின் அடுத்த மேயர் மராத்தி மொழி பேசுபவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு, மும்பையில் உள்ள ஊடுருவல்காரர்களை அடையாளம் காண்டு நாடு கடத்தப்படுவதையும் உறுதிப்படுத்தும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. பிருஹன் மும்பை மாநகராட்சி(பிஎம்சி) உள்பட 29 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஜனவரி 16ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பாஜக-சிவ சேனா கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், "துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் நானும் மும்பையின் மேயர் ஒரு மராத்தியாகவும், இந்துவாகவும் இருப்பார் என்பதை தெளிவுபடுத்தி உள்ளோம். பர்தா அணிந்த ஒரு பெண் மேயராக வருவது பற்றி சிலர் பேசினார்கள். ஆனால், மராத்தி பெருமைக்காகப் போராடுவதாகக் கூறும் எவரும்(தக்கரே சகோதரர்கள்) இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மும்பையின் மேயர் மராத்தி மொழி பேசுபவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவுமே இருப்பார்.
அதோடு, மும்பையில் உள்ள வங்கதேச ஊடுருவல்காரர்களை நாங்கள் அடையாளம் காண்டு அவர்களை திருப்பி அனுப்புவோம். கடந்த 7 மாதங்களில் பல வங்கதேசத்தினர் ஏற்கனவே மும்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அனைத்து ஊடுருவல்காரர்களையும் திருப்பி அனுப்பும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.
எதிர்க்கட்சிகள் பெரிய பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற வாக்குறுதிகள் வழங்கப்படுவதைக் கேட்டு கேட்டு மக்கள் சலிப்படைந்துவிட்டனர். எங்கள் கூட்டணி நம்பகமான மாற்று வழியை வழங்குகிறது. மும்பையில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்கும் என்று நாங்கள் உறுதி அளித்துள்ளோம். குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் நல்ல தரமான வீடுகள் வழங்கப்படும். மும்பையின் மெட்ரோ ரயில் சேவை 450 கிலோ மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். மும்பையின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு 59 நிமிடத்தில் செல்லக்கூடிய வகையில் இந்த இணைப்பு வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ரீதியாக மும்பையை மேம்படுத்த ரூ.17,000 கோடியில் சுற்றுச்சூழல் பட்ஜெட்டை அரசாங்கம் உருவாக்கும். இதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.