

நந்நன் நிலேகனி | காமகோடி | அம்ரித் பால் மீனா | அனிதா கர்வால் | சோம்நாத் | தபன் டேகா |
புதுடெல்லி: போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம் நாத், இந்திய உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, கல்வித்துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், போக்குவரத்து துறை நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெரும்பாலான போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படுகின்றன. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வும் அடுத்த ஆண்டு முதல் கணினி வழியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு உலக அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர் ஆதார் ஆணையத்தின் முதல் தலைவராகப் பணியாற்றியவர். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளின் அடிப்படையில் இதுவரை 144 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளன. தற்போது போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகளுக்காக நம்பகமான, பாதுகாப்பான தொழில் நுட்ப கட்டமைப்புகளை நந்தன் நிலேகனி உருவாக்க உள்ளார்.
ராக்கெட் விஞ்ஞானி சோம்நாத்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், ராக்கெட் விஞ்ஞானி என்று அழைக்கப்படுகிறார். அவர் இஸ்ரோவில் பணியாற்றியபோது துல்லியமான திட்டமிடலுக்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். இக்கட்டான சூழல்களை திறம்பட கையாள்வது, தவறுகளை துல்லியமாகக் கண்டறிவது, அனைத்து தரப்பு நிபுணர்களையும் ஒன்றிணைப்பது உள்ளிட்ட தலைமைப் பண்புகளுக்காக சோம்நாத் குழுவில் இணைக்கப்பட்டு உள்ளார்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அடிப்படையில் கணினி விஞ்ஞானி ஆவார். கணினி வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் திறம்பட செயல்பட்டு வருகிறார். பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வு வினாத்தாள்களை திருத்தும் பணியை நேர்த்தியாக மேற்கொள்ள அவர் மிக முக்கிய பங்களிப்பை வழங்க உள்ளார்.
உளவுத் துறை முன்னாள் இயக்குநர்: நந்தன் நிலேகனி குழுவில் இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநர் தபன் டேகா இடம் பெற்று உள்ளார். வினாத்தாள் கசிவை தடுப்பது, தேர்வில் ஆள்மாறாட்டங்களை தடுப்பது, தேர்வு தொடர்பான உளவுத் தகவல்களை திரட்டுவது ஆகியவற்றுக்காக தபன் டேகா உயர்நிலைக் குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
முன்னாள் கல்வித் துறை செயலாளர் அனிதா கர்வால் பள்ளிக் கல்வி, பொதுத்தேர்வு, கல்வித் துறை நிர்வாகத்தில் மிகுந்த அனுபவம் கொண்டவர். அவர் கல்வித் துறை செயலாளராக இருந்தபோது பல்வேறு சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டன. இவற்றை கருத்தில் கொண்டு அவர் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அம்ரித் பால் மீனா, சரக்கு போக்குவரத்து துறையின் நிபுணராக கருதப்படுகிறார். போட்டித்தேர்வு, நுழைவுத் தேர்வு வினாத்தாள்களை வாகனங்களில் கொண்டு செல்லப்படும்போது வினாத்தாள் கசிகிறது. இதை தடுக்க அம்ரித் பால் மீனா முக்கிய வியூகங்களை வகுப்பார்.