100 நாள் வேலைத் திட்டம் பெயரில் மட்டும்தான் பிரச்சினையா? - ஒரு விரைவுப் பார்வை

100 நாள் வேலைத் திட்டம் பெயரில் மட்டும்தான் பிரச்சினையா? - ஒரு விரைவுப் பார்வை
Updated on
3 min read

கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இந்த திட்டத்தின் பெயரை, ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். 

இந்தப் பெயர் மாற்ற மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மகாத்மா காந்திக்கு பதிலாக ‘ராம்’ என்ற பெயர் சேர்ப்புக்கு எதிர்ப்பு, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பல்வேறு நுணுக்கமான உட்பிரிவுகள் மூலம் இச்சட்டம் சிதைப்பதால் எதிர்ப்பு என இரண்டு விஷயங்களை முன்வைத்து எதிர்ப்பு வலுக்கிறது.

இது குறித்து மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், “ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்குவது வெறும் ட்ரெய்லர் தான். உண்மையான் தாக்கம் என்பது இந்தத் திட்டத்தின் ஆன்மாவான உரிமையில் அடிப்படையிலான வேலை உறுதி; நிபந்தனையின் அடிப்படையிலானதாக மாற்றப்பட்டுள்ளது.

ஏழைத் தொழிலாளர்களுக்கும் மாநிலங்களுக்கும் இருந்த உரிமை பந்தத்தின் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டை எடுத்துள்ளது. பல ஊடகங்கள் வேலை நாட்கள் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளதை தலைப்புச் செய்தியாக்கியுள்ளன. ஆனால், MGNREGA-வுக்கு முழுக்க முழுக்க மத்திய அரசு நிதி வழங்கிய நிலையில், VB–G RAM G-க்கு 40% நிதியை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இது நிதிச்சுமை மாற்றம் சீர்திருத்தம் என்ற பெயரில் திருட்டுத்தனமான மாநில அரசுக்கு தள்ளிவிடப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்கள் அனைத்தும் கூடுதலாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், கேரளா மட்டுமே ரூ.2,000 கோடி முதல் ரூ.2,500 கோடி வரை ஒதுக்க வேண்டியிருக்கும்” எனக் கூறுகிறார்.

மீண்டும் நிலக்கிழாருக்கு அதிகாரம்? 

இந்தச் சட்டத் திருத்தம் வேலைவாய்ப்புக்கான சமத்துவமின்மைக்கு வழிவகுக்கும். மேலும், வேலையின்மை நெருக்கடியால் ஏற்படும் புலம்பெயர்வை அதிகரிக்கும். மாநிலத்துக்குள்ளேயே கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயர்வதும், மாநிலத்தைவிட்டு வேறு மாநிலங்களுக்கு பெயர்வதும் அதிகரிக்கும். இந்த மசோதாவின் பிரிவு 5, ஒவ்வொரு மாநிலத்திலும் வேலை வழங்கப்படும் கிராமப்புறங்களை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும் என்று கூறுகிறது.

அதேபோல் வேளாண் பருவகாலங்களில் 60 நாட்கள் வேலைஉறுதி திட்டத்தை நிறுத்திவைக்கவும் இதில் வழிவகை உள்ளது. இதன்மூலம், வேளாண் அறுவடைக் காலங்களில் அந்தப் பணிகளுக்கு கூடுதல் ஆட்கள் கிடைப்பதை உறுதி செய்யலாம் என்று மசோதா குறிப்பிடுகிறது. இது தொழிலாளர்களுக்கு கூலி பேர வாய்ப்பை பறிக்கும் செயல்.

பொதுவாக வேளாண் அறுவடைக் காலங்களில் தொழிலாளர்கள் வேறு வேலை இருக்கும்பட்சத்தில் நில உரிமையாளர்களிடம் கூலிக்காக பேரம் பேச முடியும். ஆனால், இந்த சட்டத் திருத்ததின் உட்பிரிவு அந்த உரிமையை தொழிலாளர்களிடமிருந்து முற்றிலுமாகப் பறிக்கிறது. பெரும் நில உடைமையாளர்களிடமிருந்து ஊரக வேலை உறுதித் திட்டம் விடுதலை கொடுத்த நிலையில், இந்த புதிய திருத்தம் குறைந்தது ஆண்டில் 2, 3 மாதங்களாவது நிலாக்கிழார்களுக்கு பழைய அதிகாரத்தை கூலி விஷயத்தில் கொடுத்துவிடும்.

125 நாட்கள் பணி உறுதியா?

புதிய சட்ட மசோதாவில் 100 நாட்களுக்குப் பதில் 125 நாட்கள் வேலை உறுதி என்று கூறப்படுவது குறித்து சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, “இது பெயரளவில் ஏற்றப்பட்ட எண்ணிக்கை என்று வேண்டுமானால் சொல்லலாம். நாட்களை ஏற்றிவிட்டு, வேலை இருப்பதை நாங்கள் தான் சொல்வோம் என்று அதிகாரத்தை மத்திய அரசு வைத்துள்ளதால், எங்கு, எப்போது, எத்தனை நாட்கள் வழங்கப்படும். அது பரவலாக அமலாகுமா என்பதெல்லாம் கேள்விக்குறியே“ என்கின்றனர்.

டிஜிட்டல் சுமை... - ஏற்கெனவே, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கேஒய்சி எனப்படும் தனிநபர் அடையாளங்களை வங்கிக் கணக்கில் இணைத்து சரிபார்த்தல் கட்டாயமாக்கப்பட்டதால் கடந்த அக்டோபர் 10 முதல் நவம்பர் 14 வரையிலான காலக்கட்டத்தில் 27 லட்சம் தொழிலாளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், புதிய மசோதாவில் வருகைப் பதிவு, கூலி வழங்குதல் ஆகியவற்றை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், இன்னும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படாத கடைக்கோடி கிராமங்களில் ஊரக வேலை உறுதித் திட்டம் துடைத்தெறியப்படும் அபாயம் கூட உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இனி உரிமைக்கு வேலையில்லை... 

ஊரக வேலை உறுதித் திட்டம், ஒரு மக்கள் நலத் திட்டத்தையும் தாண்டி சிறப்பானது. காரணம் இது தொழிலாளர்கள் நலனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. வேலை செய்யும் வயதை எட்டிய ஒரு கிராமத்து நபர், சட்டப்படி தனக்கு வேலை வழங்குமாறு உரிமை கோரலாம். அப்படி வேலை வழங்கப்படாவிட்டால் அவர், வேலையின்மைக்கான படியைப் பெற தகுதியானவர் ஆகிவிடுவார்.

ஆனால், VB-G RAM G மசோதாவின்படி, மத்திய அரசு எந்த கிராமப்புற பகுதியில் வேலை இருப்பதாகச் சொல்கிறதோ அங்குதான் வேலை செய்ய முடியும். ஆக, எனக்கு வேலை எங்கே என்று ஒரு தொழிலாளி வினவும் அதிகாரத்தைக் கொடுத்த சட்டம், வேலை இருந்தால் தருவோம் என்று அரசு முடிவெடுக்கும் நிலைக்கு மாறும் சூழலை புதிய மசோதா உருவாக்குகிறது என்று சமூக நல ஆர்வலர்கள் அக்கறை தெரிவிக்கின்றனர்.

மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதனில் செயலாற்றும் சமூகநல ஆர்வலர் நிகில் தே, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், “புதிய மசோதா இந்தியாவின் வேலை செய்யும் உரிமைக்கு முடிவு கட்டியுள்ளது. வேலை உரிமையை வழங்கும் அதிகாரத்தை முழுக்க முழுக்க மத்திய அரசு தன்வசம் எடுதுதுக் கொண்டுள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு தொழிலாளர் நல அமைப்புகளும் இந்தச் சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது நிறைவேற்றப்பட்டால், இரண்டு தசாப்தங்களாக நிலவும் உரிமைகள் சார்ந்த வேலைவாய்ப்பு கட்டமைப்பு முடிவுக்கு வரும். இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் கிராமப்புற வேலைகளின் பங்கு மறுவடிவம் பெறும். அது ஆக்கபூர்வமானதாக நிச்சயம் இருக்காது என்பதே அரசியல் வல்லுநர்களின் பார்வையாக உள்ளது.

கவனம் பெற்ற ராகுல் எதிர்வினை: இந்த சட்டமசோதா குறித்து முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையின் வாழும் வடிவமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) திகழ்கிறது.

இது கோடிக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு ஓர் உயிர்நாடியாக இருந்து வருகிறது. மேலும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்பு வலையாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூன்று அடிப்படைக் கொள்கைகளின் மீது கட்டமைக்கப்பட்டது. அவை:

1. வேலைவாய்ப்புக்கான உரிமை - வேலை கோரும் எவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும்.

2. கிராமங்கள் தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தீர்மானிப்பதற்கான சுயாட்சி.

3. முழு ஊதிய ஆதரவு மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% மத்திய அரசால் வழங்கப்படும்.

மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீது பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த வெறுப்பு உண்டு. அதனால், அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் இத்திட்டத்தை ‘மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவி’-யாக மாற்ற விரும்புகிறார்.” என விமர்சித்திருந்தார்.

பெயர் மட்டும்தான் பிரச்சினையா?

புதிய மசோதாவில் வேலை உரிமைக்கு வேட்டு, டிஜிட்டல் மயத்தால் நடைமுறைச் சிக்கல், மாநில அரசுகளின் மீது நிதிச்சுமை எனப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. மேலும், ராகுல் சொல்வது போல்,  இது ஒரு ‘மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவி’-யாக மாறும் சாத்தியக்கூறுகள் தான் அதிகமாக உள்ளன. இந்திய கிராமங்களுக்கு இத்திட்டம் மூலம் கிடைத்துவந்த சமூகப் - பொருளாதார பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. இத்தனை விஷயங்களையும் சீர்தூக்கும்போது இதில் காந்தி வெறுப்பையும் தாண்டி சில நுணுக்கங்கள் இருக்கிறது என்றே புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

100 நாள் வேலைத் திட்டம் பெயரில் மட்டும்தான் பிரச்சினையா? - ஒரு விரைவுப் பார்வை
திருவனந்தபுரத்தில் பாஜக எழுச்சி சாத்தியமானது எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in