அபிஜித் திப்கே உட்பட 3 பேரை விமானத்துக்குள் கைது செய்ய பெண் போலீஸாரை பயன்படுத்தியது ஏன்?

அபிஜித் திப்கே உட்பட 3 பேரை விமானத்துக்குள் கைது செய்ய பெண் போலீஸாரை பயன்படுத்தியது ஏன்?
Updated on: 
1 min read

புதுடெல்லி: போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிஜேபி நிறுவனரான அபிஜித் திப்கே, தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஏர் இந்தியா விமானம் மூலம், டெல்லிக்கு நேற்று வந்தனர். விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து தரையிறங்கியது.

அப்போது, விமானத்துக்குள் நுழைந்த டெல்லி காவல் துறையின் பெண் போலீஸ் அதிகாரிகள், அவர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதில் கவனத்தை ஈர்த்த விஷயம், அவர்களைப் பிடிக்க டெல்லி போலீஸார் பெண் அதிகாரிகளை அனுப்பியதுதான். ஆண் போலீஸாரை அனுப்பினால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என டெல்லி போலீஸார் கருதியிருக்கலாம் என தெரிகிறது. காரணம், விமானத்துக்குள் பயணிகள் நடந்து செல்லும் பாதை குறுகலாக இருக்கும். போலீஸாரும் மற்றவர்களும் எளிதில் நகர முடியாது. அங்கு சிறிய அளவில் மோதல் ஏற்பட்டாலும், அது பெரும் பரபரப்பாக மாறக்கூடும்.

இதுபோன்ற சூழலைத் தவிர்க்கவும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்கவும் பெண் போலீஸாரை அனுப்ப முடிவு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. சில வாக்குவாதங்களைத் தவிர, பெரிய அளவிலான குழப்பமின்றி 3 பேரையும் பெண் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடந்த ஜூலை 20-ம் தேதி நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது வன்முறை ஏற்பட்டது. அப்போது, ஆண் போலீஸார் இளம் பெண்களைத் தாக்கியதாக சிஜேபி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, போலீஸார் விமானத்துக்குள் நுழைந்ததும், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த திப்கே தனது செல்போனில் சம்பவத்தைப் பதிவு செய்யத் தொடங்கினார். தாஸ் நடுவில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ரங்கா அமர்ந்திருந்தார்.

போலீஸாரைக் கண்டதும், அவர்கள் மூவரும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டனர். விமானத்துக்குள் எடுக்கப்பட்ட காணொலிகளில், சுமார் 12 பெண் போலீஸ் அதிகாரிகள் 3 பேரையும் சூழ்ந்து நிற்பது தெரிந்தது. தன்னைக் கைது செய்யும் விதம் குறித்து திப்கே போலீஸாரிடம் கேள்வி எழுப்பினார்.

“நாடு எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் பாருங்கள். நேரடியாக விமானத்திலிருந்தே எங்களைக் கைது செய்ய வந்திருக்கிறார்கள். இந்திரா காந்திகூட இப்படிச் செய்ததில்லை. இது சர்வாதிகாரம். நான் கைது செய்யப்படுவதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். என்னைக் கைது செய்யுங்கள்” என்று திப்கே கூறுவது காணொலியில் பதிவாகியுள்ளது.

அபிஜித் திப்கே உட்பட 3 பேரை விமானத்துக்குள் கைது செய்ய பெண் போலீஸாரை பயன்படுத்தியது ஏன்?
டெல்லியில் சிஜேபி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மம்தா, கேஜ்ரிவால் உட்பட 4 முன்னாள் முதல்வர்கள், 7,000 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in