

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டெல்லியில் குழந்தைகள் நச்சுக் காற்றை சுவாசித்து வளர்கின்றன என்று பெற்றோர் கூறுகின்றனர். காற்று மாசு பாட்டால் டெல்லி மக்கள் சோர்வடைந்து, வெளியில் வர பயந்து வாழும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் குழந்தைகள் நம் கண் முன்பாகவே மூச்சு திணறிக் கொண்டிருக்கும்போது நாட்டின் பிரதமராக மோடியால் எப்படி அமைதி காக்க முடிகிறது?
இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க அரசு ஒரு உருப்படியான அவசர திட்டத்தை வகுக்கவில்லை. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற வேகமோ, பொறுப்போ இல்லை. டெல்லியில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெல்லியின் மோசமான காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் தேவை. காற்றின் நச்சு அளவை கையாளக்கூடிய கடுமையான மற்றும் உடனடியாக செயல்படுத்தக் கூடிய அவசர செயல்திட்டமே தற்போது நமக்கு தேவை. நமது குழந்தைகளுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க கொடுப்பது நமது கடமை. இதில் சாக்குப்போக்கு, கவனச் சிதறல்கள் கூடாது. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. வரும் வாரங்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.