

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மூன்றரை கிலோ தங்க நகைகளுடன் வலம் வரும் கன்னையா லாலிடம் ரூ.5 கோடி கேட்டு தாதா கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
ராஜஸ்தானின் சித்தோர்கர் நகரை சேர்ந்த பழ வியாபாரி கன்னையா லால் காதிக் (50). தங்க நகைகள் மீது மிகவும் மோகம் கொண்ட இவர் மூன்றரை கிலோ நகை அணிந்து வலம் வருவது வழக்கம்.
இதனால் இவரை சித்தோர்கரின் தங்க மனிதர் மற்றும் சித்தோர்கரின் பப்பி லஹிரி என்றும் அழைக்கின்றனர். மறைந்த பிரபல இசை அமைப்பாளர் பப்பி லஹரி, எப்போதும் அதிக நகைகள் அணிந்திருந்தார். அவரை பார்த்துதான் தனக்கும் அந்த ஆர்வம் வந்ததாக கன்னையா லால் அடிக்கடி கூறுவார்.
இந்நிலையில் தாதா ரோகித் கொடாரா கும்பலிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டு தனக்கு மிரட்டல் வந்துள்ளதாக கன்னையாலால் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னையா லாலுக்கு வாட்ஸ் அப் மற்றும் போனில் மிரட்டல் வந்தது. அதில் ரூ.5 கோடி தராவிட்டால் தங்க நகைகள் அணியும் நிலையில் நீ இருக்க முடியாது. இந்த விஷயத்தை அமைதியாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து நகரின் கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் பிகானீர் பகுதியை சேர்ந்தவர் தாதா ரோகித் கொடாரா. இவர் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் 32-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் தற்போது கனடாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர், ராஜஸ்தானில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார். பஞ்சாபில் கடந்த ஆண்டு பிரபல ராப் பாடகர் சித்து மூசே வாலா கொலையில் இவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.