

திருவனந்தபுரம்: கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தேர்தலில் 26 கிராம பஞ்சாயத்து, 2 நகராட்சி மற்றும் 1 மாநகராட்சியில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 50 இடங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 4 மாநகராட்சிகளிலும், எல்டிஎஃப் கூட்டணி 1 மாநகராட்சியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழலில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராக வி.வி.ராஜேஷ் பதவியேற்க வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா, துணை மேயராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல். பாஜக தலைமை புதிய மேயரை அறிவிக்கும் என இருவரும் தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் விரைவில் திருவனந்தபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தின் முன்னாள் பாஜக தலைவரான வி.வி.ராஜேஷ், இந்த தேர்தலில் கொடுங்கனூர் வார்டில் வெற்றி பெற்றார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.ஸ்ரீலேகா, சாஸ்தாமங்கலம் வார்டில் வெற்றி பெற்றார். இவர்களில் வி.வி.ராஜேஷ் மேயராகவும், ஸ்ரீலேகா துணை மேயராகவும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.