

சுவேந்து அதிகாரி | அக்னிமித்ரா பால்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளதாகத் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், தனது அரசியல் குருவான மம்தா பானர்ஜியின் இடத்தை தட்டிப் பறிக்கிறார் சுவேந்து அதிகாரி. மேற்கு வங்க தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவின் சட்டமன்றக் குழுக் கூட்டம், கொல்கத்தாவில் வெள்ளிக் கிழமை (மே 8) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, சுவேந்து அதிகாரியின் பெயரை முன்மொழிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதனை முறைப்படி அறிவிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி, சாமிக் பட்டாச்சார்யா மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சல் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
புதிய அரசு பதவியேற்கும் விழா சனிக்கிழமை (மே 9) நடைபெறும் என்று சாமிக் பட்டாச்சார்யா உறுதிப்படுத்தியுள்ளார். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான ‘ரவீந்திர ஜெயந்தி’ அன்று இப்பதவியேற்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் முதல் முறையாக அமையவுள்ள பா.ஜ.க. ஆட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்க உள்ளனர்.
மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் என்பவர் மண்ணின் மைந்தராகவும், வங்காள மொழியில் பயின்றவராகவும் இருக்க வேண்டும் என்று அமித் ஷா ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். அந்த தகுதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவராக சுவேந்து அதிகாரி திகழ்கிறார். இதனிடையே முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் அசன்சோல் தெற்குத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.வின் அக்னிமித்ரா பாலின் பெயரும் பலமாக அடிபடுகிறது.
இது குறித்து பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “முதல்வர் பதவிக்கான பட்டியலில் சுவேந்து அதிகாரியின் பெயர் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா மற்றும் மாநிலத் துணைத் தலைவர் அக்னி மித்ரா பால் ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன” என்றார்.
அசன் சோல் தெற்குத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸின் தபஸ் பானர்ஜியை 40,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அக்னிமித்ரா பால் அபார வெற்றி பெற்றுள்ளார்.