

ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீஷன், கே. முரளீதரன்
திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைக்கு வரும் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இங்குள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும்(யுடிஎஃப்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும்(எல்டிஎஃப்) கடும் போட்டியில் உள்ளன.
ஆனால், காங்கிரஸில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் கேரள காங்கிரஸில் தலைவர்கள் பலர் உள்ளனர். கேரளத்தில் முதல்வர் பதவி வேட்பாளராக மூத்த தலைவரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி. சதீஷன் இருக்கிறார். இவருக்கு அதிக அளவில் மேலிடத்தில் செல்வாக்கு உள்ளது.
மற்றொரு முதல்வர் வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா உள்ளார். அவருக்கு ஆதரவாக கட்சியின் மூத்த தலைவர்கள் பி.ஜே.குரியன், கே. சுதாகரன் ஆகியோர் ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.
2021-ல் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த போது கட்சியை சிறப்பாக வழிநடத்தியவர் வி.டி.சதீஷன். கடந்த 5 ஆண்டுகளாக கட்சியை ஒருங்கிணைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருபவர் சதீஷன். எனவே, அவரைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
அதேநேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே. முரளீதரனும் முதல்வர் பதவிக்கு குறிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்த முறை வட்டியூர்காவு தொகுதியில் போட்டியிடுகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியைப் பெற அவரும் தீவிரமான போட்டியில் இருப்பார் என்று தெரிகிறது.
ஆனால், தேர்தலின் முடிவில் காங்கிரஸ் மேலிடம் யாரைகைகாட்டுகிறதோ அவரே முதல்வர் பதவியில் அமர்வார். சட்டப்பேரவைத் தேர்தலின் போது முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிப்பதில்லை. அதைப் போலவே இந்தத் தேர்தலிலும் கேரளத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்காது என்றே காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வெற்றிபெற்ற பின்னரே முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்யும்.