

மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 11 மணிக்குள் தொகுதி முன்னணி நிலவரங்கள் தெரியவரும்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார் மம்தா பானர்ஜி. அதே நேரத்தில் அங்கு திரிணமூல் காங்கிரஸுக்கு பாஜக கடும் சவாலை அளித்து வருகிறது. இம்முறை ஆட்சியமைக்கும் அளவுக்கு தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று வாக்கு கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எனவே, இங்கு ஆட்சியமைப்பதில் இரு கட்சிகள் இடையே பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 பேரவைத் தொகுதிகள் உள்ளன. அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 126 இடங்கள் உள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 85 முதல் 100 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து அசாமில் 3-வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள சட்டப்பேரவையில் 140 தொகுதிகள் உள்ளன. தற்போது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அங்கு ஆட்சி செய்து வருகிறது. 2016 முதல் தொடர்ந்து 2 முறை எல்டிஎஃப் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
எனவே, 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற எல்டிஎஃப் முயன்று வருகிறது. கருத்துக்கணிப்புகளில் எல்டிஎஃப் கூட்டணி 60 முதல் 65 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு கடும் சவாலை அளித்து வருகிறது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மை பெற 71 இடங்கள் தேவை. கருத்துக் கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 70 முதல் 75 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.