“உங்கள் தலைவர்கள் அன்று பிரிட்டிஷாருக்கு வேலை செய்தனர்” - அமித் ஷாவுக்கு கார்கே பதில்

“உங்கள் தலைவர்கள் அன்று பிரிட்டிஷாருக்கு வேலை செய்தனர்” - அமித் ஷாவுக்கு கார்கே பதில்
Updated on
1 min read

புதுடெல்லி: “1921-ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியபோது, ​​காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்தே மாதரம் பாடி சிறைக்குச் சென்றனர். அப்போது உங்கள் தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தார்கள்” என்று மாநிலங்களவையில் அமித் ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

மாநிலங்களவையில் இன்று (டிச.9) பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலரும் ஜவஹர்லால் நேருவை அவமதித்ததாக குற்றம் சாட்டினார்.

மேலும், “வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே தேசியப் பாடலாகப் பயன்படுத்துவதற்கான முடிவு, மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைவர்களால் கூட்டாக எடுக்கப்பட்டது” என்று கார்கே கூறினார்.

வந்தே மாதரம் தேசியப் பாடலின் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்ததன் பின்னணியில் திருப்திப்படுத்தும் அரசியல் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "நாங்கள் எப்போதும் வந்தே மாதரம் பாடி வருகிறோம். ஆனால் வந்தே மாதரம் பாடாதவர்களும் இப்போது அதைப் பாடத் தொடங்கியுள்ளனர். அது வந்தே மாதரத்தின் சக்தி. இது ஒரு தேசிய விழா, ஒரு விவாதம் அல்ல.

1921-இல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியபோது, ​​காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்தே மாதரம் பாடி சிறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உங்கள் தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போது நீங்கள் எங்களுக்கு தேசபக்தியைக் கற்பிக்கிறீர்களா? அப்போது நீங்கள் தேசபக்தியைக் கண்டு பயந்து ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் ஜவஹர்லால் நேருவை குறிவைக்கின்றனர்.

வந்தே மாதரம் பாடலின் சரணங்களை குறைக்கும் முடிவு மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைவர்களால் கூட்டாக எடுக்கப்பட்டது. நீங்கள் இந்த தலைவர்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அது அவர்களின் கூட்டு முடிவு. ஆனால், ஏன் நேருஜியை மட்டும் குறிவைக்கிறீர்கள்?" என்று கார்கே கூறினார்.

“உங்கள் தலைவர்கள் அன்று பிரிட்டிஷாருக்கு வேலை செய்தனர்” - அமித் ஷாவுக்கு கார்கே பதில்
“வந்தே மாதரம் பாடியவர்களை அன்று இந்திரா காந்தி சிறையில் அடைத்தார்” - அமித் ஷா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in