

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலைப் பற்றி மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் வந்தே மாதரம் பாடல் ஒடுக்கப்பட்டது, அப்போது வந்தே மாதரம் பாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று கூறினார்.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவுக்கான சிறப்பு விவாதத்தில் மாநிலங்களவையில் இன்று பேசிய அமித் ஷா, “வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, நாடு சுதந்திரம் அடையவில்லை. அதன் பொன்விழா ஆண்டு வந்தபோது, ஜவஹர்லால் நேரு அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். வந்தே மாதரம் 100-வது ஆண்டு வந்தபோது, அவசரநிலையால் வந்தே மாதரம் பாடியவர்களை இந்திரா காந்தி சிறையில் அடைத்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டனர். செய்தித்தாள்கள் தணிக்கை செய்யப்பட்டது. காங்கிரஸ் தனது திருப்திப்படுத்தும் கொள்கையின் கீழ் வந்தே மாதரத்தைப் பிரித்திருக்காவிட்டால், நாடு பிளவுபட்டிருக்காது. பொன்விழாவின்போது ஜவஹர்லால் நேரு வந்தே மாதரம் பாடல் வரிகளை குறைத்தது திருப்திப்படுத்தும் அரசியலின் தொடக்கம்.
தற்போது பல இண்டியா கூட்டணி தலைவர்கள் வந்தே மாதரத்தைப் பாட மறுத்துவிட்டனர். அந்தப் பாடல் பாடப்பட்டபோது இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
1992=ஆம் ஆண்டு, பாஜக எம்.பி. ராம் நாயக் வந்தே மாதரம் பாடலை மீண்டும் பாடுவது குறித்த பிரச்சினையை எழுப்பினார். அந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, சபாநாயகரை இந்த நடைமுறையை மீட்டெடுக்குமாறு கடுமையாக வலியுறுத்தினார். மக்களவை அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
வந்தே மாதரம் அந்தக் காலத்தில் சுதந்திரத்திற்கான ஒரு பேரணியாக இருந்தது. இப்போது வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு முழக்கமாக இது செயல்படும்” என்று அமித் ஷா பேசினார்.