இந்திய வெளியுறவு கொள்கைக்காக அமெரிக்கா வேறு என்ன திட்டங்களை வைத்துள்ளது? - காங்கிரஸ்

இந்திய வெளியுறவு கொள்கைக்காக அமெரிக்கா வேறு என்ன திட்டங்களை வைத்துள்ளது? - காங்கிரஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: வெனிசுலா அதிபர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வர உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இந்திய வெளியுறவுக் கொள்கைக்காக அமெரிக்கா வேறு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு வரும் 26-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ புதுடெல்லி வர உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, தனது பயணத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். மேலும், வெனிசுலாவின் செயல் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அடுத்த வாரம் இந்தியா வர இருப்பதாக நான் அறிகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

வெனிசுலா செயல் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியா வர இருப்பது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை அறிவிக்கவில்லை. வெனிசுலா அரசும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்படுவதாக கடந்த ஆண்டு மே 10ம் தேதி மாலை 5.37 மணிக்கு அறிவித்த முதல் நபர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ.

வெனிசுலா அதிபர் அடுத்த வாரம் இந்தியா வர இருப்பதாக நேற்று அறிவித்த முதல் நபரும் அவரேதான். இந்தியாவும் வெனிசுலாவும் இது குறித்து உறுதிப்படுத்தாத நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த வாரம் புதுடெல்லியில் நடைபெற இருந்த சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பின் (International Big Cat Alliance) தொடக்க விழாவில் வெனிசுலா அதிபர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டதன் காரணமாக அந்த நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுக் கொள்கைக்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வேறு என்ன திட்டங்களை வைத்துள்ளார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வெளியுறவு கொள்கைக்காக அமெரிக்கா வேறு என்ன திட்டங்களை வைத்துள்ளது? - காங்கிரஸ்
வன்னியரசுக்கு சமூகநீதித் துறை, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in