

ஆதீர் ரஞ்சன் சவுத்ரி
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஏப்.23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக.வுக்கு இடையில் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ், மும்முனைப் போட்டியை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
இதன்மூலம், மேற்கு வங்கத்தில் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கவும் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி தொண்டர்களைத் தக்க வைக்கவும் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஒருவேளை மம்தாவின் திரிணமூல் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அந்த நேரத்தில் ‘கிங் மேக்கர்’ அந்தஸ்தைப் பெறவும் முடியும் என்று காங்கிரஸ் கணக்கு போட்டுள்ளது. இதற்காக, தேசிய மற்றும் மாநில அளவில் பிரபலமானவர்களை வேட்பாளர்களாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
குறிப்பாக மூத்த தலைவர்கள் சுமார் 30 பேரை காங்கிரஸ் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு தினாஜ்பூர் மற்றும் தெற்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளைக் கைப்பற்றுவதில் தீவிர கவனம் செலுத்துகிறது. முஸ்லிம்கள் அதிகம் இருப்பதால் இந்த 4 மாவட்டங்களில்தான் அக்கட்சியின் ஒட்டுமொத்தத் தேர்தல் வியூகமும் குவிந்துள்ளது. மவுசம் பெனசீர் நூர், ஆதீர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மோஹித் சென்குப்தா போன்ற முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவர்களில் ஆதீர் ரஞ்சன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர். அவரது பாரம்பரியக் கோட்டையான பஹராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஏறக்குறைய 30 ஆண்டுக்குப் பிறகு அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த 1996-ல் மக்களவை தேர்தலில் நபக்ராம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆதீர், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்து வருகிறார். தற்போது மீண்டும் மாநிலத் தேர்தலில் கட்சி களமிறக்கி உள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 1977-ல் ஆட்சியை இழந்த பிறகு காங்கிரஸுக்கு இறங்குமுகம் தொடங்கியது. இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்த பிறகும், காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. 2021 தேர்தலில் காங்கிரஸால் ஒரு இடத்தைக் கூடப் பெற முடியவில்லை. அதன் வாக்கு சதவீதமும் வெறும் 3 சதவீதமாகக் குறைந்தது.
ஆனால், காங்கிரஸில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்தார். அதன்பிறகு இடதுசாரியும் காணாமல் போய்விட்டது. தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற மம்தா தீவிரமாக முயற்சிக்கிறார். இதன் விளைவாக, 30 ஆண்டுக்குப் பிறகு வங்காளத்தில் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான தொகுதிகளைப் பெற காங்கிரஸ் மும்முரமாக களமிறங்கி உள்ளது.