

புதுடெல்லி: எஸ்ஐஆர் பணியில் மாவட்ட நீதிபதிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் பயிற்சிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கை, ஆட்சேபனை மனுக்களை பரிசீலிக்க மாவட்ட நீதிபதிகள், மாவட்ட முன்னாள் நீதிபதிகளை பணியில் அமர்த்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதனிடையே, அண்டை மாநிலங்களான ஒடிசா, பிஹார் மாநிலங்களை சேர்ந்த மாவட்ட நீதிபதிகளை வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கை, ஆட்சேபனை மனுக்களை பரிசீலிக்கும் பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கி அண்மையில் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாவட்ட நீதிபதிகளுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி வழங்குகிறது. எந்த ஆவணங்களையெல்லாம் ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மாவட்ட நீதிபதிகளை சுதந்திரமாக செயல்பட உத்தரவிட வேண்டும் என முறையிட்டார்.
இதை நிராகரித்த தலைமை நீதிபதி, ‘‘எஸ்ஐஆர் குறித்து யார் பயிற்சி வழங்க முடியும்? தற்போது எங்கள் நீதிசார் அலுவலர்களை சந்தேகிக்காதீர்கள். நீதிபதிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது’’ என்று குறிப்பிட்டனர்.