

கோப்புப் படம்
கொல்கத்தா: மேற்கு வங்க அரசு நடத்தும் கேன்டீன்களில் ரூ.5-க்கு மீன் உணவு வழங்கப்படவுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மச்-பாத் என்ற பெயரில் வாரத்துக்கு 2 நாட்கள் ரூ.5-க்கு மீன் உணவு வகைகளை அரசு நடத்தும் கேன்டீன்களில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்த கேன்டீன்களில் முட்டை சாதம், அரிசி உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் மீன் உணவைச் சேர்க்கும் இந்த திட்டமானது, மேற்கு வங்க பொது உணவு விநியோகக் கண்ணோட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் அரசியல் மாற்றத்தைக் குறிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மக்களுக்கு, மீன் என்பது வெறும் உணவு மட்டுமல்ல.
அது அவர்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே, மீன் மற்றும் அரிசி உணவை மிகக் குறைந்த மானிய விலையில் வழங்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, ஒரு நலத்திட்டமாகவும், வங்க மக்களின் மனநிலையைச் சென்றடையும் ஒரு குறியீட்டு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் இது மேற்கு வங்கம் முழுவதும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் அரசு நடத்தும் கேன்டீன்களில் தினக் கூலிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தார், நகரில் வசிக்கும் ஏழை மக்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.
தற்போது, இந்த கேன்டீன்களில் பாரம்பரியமான “மச்-பாத்” உணவை வெறும் 5 ரூபாய்க்குப் பெறுவது என்பது, மானிய விலையில் கிடைக்கும் உணவாக மட்டுமல்லாமல், வங்கஅடையாளத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதாகவும் பார்க்கப்படுவதாக மேற்கு வங்க அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.