

கொல்கத்தா: மேற்குவங்க முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தின் 152 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேற்குவங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டத்தில் 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. இதை கருத்தில் கொண்டு முதல்கட்ட தேர்தலில் மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்றும் நாளையும் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். பின்இருக்கையில் யாரையும் ஏற்றக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ தேவை, குடும்ப விழாக்கள், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்வது ஆகிய பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல வீட்டு உபயோக பொருட்கள், உணவு வகைகளை விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.