

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி இருக்குமா அல்லது ஒரு கட்சிக்கு தெளிவான வெற்றி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) 4-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2021 தேர்தலில் கணிசமான இடங்களுடன் 2-ம் இடம் பிடித்த பாஜக இந்த முறை ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியுள்ள நிலையில், ஒரு முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தல் எவ்வளவு தெளிவானதாக இருக்கும்? கடந்த கால தேர்தல்களில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை அலசும் போது பல்வேறு விவரங்கள் தெரிய வருகின்றன. கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல் முடிவுகளை ஒப்பிடும் போது, தொகுதிகள் கைப்பற்றப்பட்ட விதத்தில் தெளிவான மாற்றம் தெரிகிறது.
2016-ல், பெரும்பாலான வெற்றி நடுத்தர அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே இருந்தன. சுமார் 74 சதவீத இடங்களில் (219 தொகுதிகள்) வாக்கு வித்தியாசம் 5,000 முதல் 25,000 வாக்குகளாக இருந்தன. 25,000-க்கு மேல் வாக்கு வித்தியாசம் இருந்த இடங்கள் 98 (33 சதவீதம்) மட்டுமே இருந்தன.
இந்த வித்தியாசம் 2021 தேர்தலில் மாறியது. 25,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 132-ஆக (44 சதவீதம்) உயர்ந்தது. எனினும், 10,000 முதல் 25,000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 121-ல் இருந்து 98-ஆகக் குறைந்தன. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (1,000-க்கும் குறைவு) வெற்றி பெற்றவை வெறும் 7 தொகுதிகள் மட்டுமே.
மேற்கு வங்க தேர்தல்கள் எவ்வாறு அதிக தெளிவானதாக மாறி வருகின்றன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கடும் போட்டிகளை விட, தெளிவான வாக்கு வித்தியாசத்துடன் அதிக தொகுதிகள் கைப்பற்றப்படுகின்றன. பெரிய வாக்கு வித்தியாசத்தை நோக்கிய இந்த மாற்றம், பா.ஜ.க-வை விட டிஎம்சிக்கு அதிக பலன் அளித்துள்ளது. 2021-ல், டிஎம்சி 25,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 118 இடங்களை வென்றது, அதேநேரம் பா.ஜ.க இந்த பிரிவில் 13 இடங்களை மட்டுமே வென்றது. 10,000-க்கும் குறைவான மற்றும் 10,000 முதல் 25,000 வரையிலான வாக்கு வித்தியாசங்களில் பாஜக தனது எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
பாஜக தனது செல்வாக்கை விரிவுபடுத்தி இருந்தாலும், பல தொகுதிகளில் டிஎம்சி வலுவான மற்றும் தெளிவான வாக்காளர் ஆதரவைப் பெற்றுள்ளதை 2021 தேர்தல் முடிவு காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக வாக்கு வித்தியாசங்கள் அதிகரித்த போதிலும், சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவியது. 2021-ல் பலராம்பூர், தின்ஹாட்டா, காட்யால், குல்டி, தந்தன், தம்லுக், ஜல்பைகுரி ஆகிய 7 தொகுதிகளில் மட்டுமே 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் முடிவுகள் அமைந்தன. இதில் பாஜக 4 இடங்களையும், டிஎம்சி 3 இடங்களையும் வென்றன.
கடந்த 2 தேர்தல்களின் தரவுகள், மேற்கு வங்கம் அதிக தெளிவான முடிவுகளை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், இதே போன்ற சூழல் தொடருமா அல்லது மீண்டும் கடும் போட்டி அதிகரிக்குமா என்பது மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வரும்.