

உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி
ஏபுதுடெல்லி: எஸ்ஐஆர் விவகாரத்தில் மேற்குவங்க மாநிலம் குறிவைக்கப்பட்டுள்ளது, அங்கு ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில முதல்வர் மம்தா வாதாடினார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தடை விதிக்க வேண்டும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவதற்காக எஸ்ஐஆர் பணியை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியும் பதில் கிடைக்கவில்லை. எஸ்ஐஆர் பணியின்போது ஆதார் அட்டையை ஏற்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பிற மாநிலங்களில் பின்பற்றினாலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை.
சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தை குறி வைத்துள்ளார்கள். 2 ஆண்டுகள் செய்ய வேண்டிய எஸ்ஐஆர் பணியை 2 மாதங்களிலேயே செய்ய முற்படுவது ஏன்? அதுவும் பண்டிகை காலங்களில் அறுவடை நாட்களில் மக்கள் நகரங்களில் இல்லாத போது அவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நோட்டீசை தேர்தல் ஆணையம் அனுப்பி வருகிறது.
எஸ்ஐஆர் பணியை மேற்கொண்டதில் தேர்தல் ஆணையத்தின் தொல்லை தாங்காமல் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பாஜகவை சார்ந்த எட்டாயிரம் பெயரை மைக்ரோ பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதனால் 58 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க மக்களை அச்சுறுத்த தேர்தல் ஆணையம் நினைக்கிறது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, டி எஸ் நாயுடு ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் மம்தா மனுவுக்கு பதில் அளிக்க ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.