

ஐசிசி ஆடவருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த டி20 கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் குறித்த பார்வை..
இந்தியா: நடப்பு சாம்பியனான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி ஒருபோதும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது இல்லை. மேலும் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடரை நடத்தும் நாடு இதுவரை கோப்பையை தக்கவைத்ததும் கிடையாது. மேலும் எந்த அணியும் 3 முறை கோப்பயை கைகளில் ஏந்தியது இல்லை. ஆனால் இம்முறை இந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி எழுதக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி சமீபத்திய ஐசிசி டி 20 தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது. பேட்டிங் ஆர்டரில் 8-வது வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இருப்பது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா எந்த வகையிலான பந்துவீச்சையும் வெளுத்து வாங்கக்கூடிய வீரராக திகழ்கிறார். சர்வதேச டி 20 அரங்கில் 38 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 2 சதங்கள், 8 அரை சதங்களுடன் 1,297 ரன்கள் குவித்துள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் பிரம்மாண்டான வகையில் 194.74 ஆக உள்ளது. இதனால் இம்முறை டி 20 உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்றே இஷான் கிஷனும் பேட்டிங்கில் மிரட்டக்கூடிய வீரராக உருவெடுத்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் அவர், 43 பந்துகளில் 103 ரன்களை விளாசி மிரட்டியிருந்தார். இஷான் கிஷனும், அபிஷேக் சர்மாவும் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடும் திறனை கொண்டிருப்பது டாப் ஆர்டருக்கு பெரிய பலமாக உள்ளது. இவர்களுடன் சஞ்சு சாம்சனும் மட்டையை சுழற்றத் தொடங்கினால் இந்திய அணி அசுர பலம் பெறும்.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோரும் ஆட்டத்தின் போக்கை தங்களது அதிரடியால் எந்த நேரத்திலும் மாற்றும் திறன் கொண்டவர்கள். காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள திலக் வர்மாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சளைத்தவர் இல்லை.
2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி முதலில் பேட் செய்த ஆட்டங்களில் மிகப்பெரிய அளவில் ரன்களை வேட்டையாடி உள்ளது. அதேவளையில் சமீபகாலமாக 200 ரன்களுக்கு மேலான இலக்கை எளிதாக 15 ஓவர்களுக்குள்ளேயே வெற்றிகரமாக கடந்துள்ளது.
பந்துவீச்சிலும் இந்திய அணி சமநிலையுடன் இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சர்வதேச டி 20 அரங்கில் 100 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி உள்ளனர். அர்ஷ்தீப் சிங் தொடக்க ஓவர்களிலும், பும்ரா இறுதிக்கட்ட ஓவர்களில் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள்.
இவர்களுக்கு உறுதுணையாகவும் 3-வது பிரதான வேகப்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். இவரும் சர்வதேச டி 20 அரங்கில் 100 விக்கெட்களுக்கு மேல் சாய்த்துள்ளார். மேலும் ஹர்ஷித் ராணாவும் அணியில் இருப்பது கூடுதல் பலம். மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி நடு ஓவர்களில் மாயா ஜாலங்கள் நிகழ்த்தக்கூடியவர். 36 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 59 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இடதுகை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் பலம் சேர்ப்பவராக உள்ளார். 53 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 94 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
எனினும் இவர்கள் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வருண் சக்ரவர்த்தியும், குல்தீப் யாதவும் மீண்டுவரக்கூடும். 3-வது சுழற்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டரான அக்சர் படேல் உள்ளார். அவர், 83 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
4-வது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கும் வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் காயம் அடைந்துள்ளார். 51 விக்கெட்களை கைப்பற்றி உள்ள அவர், முழு உடற்தகுதியை பெறுவாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை அவர், உலகக் கோப்பையை தவறவிட்டால் ரவி பிஷ்னோய்க்கு அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடும்.
பேட்டிங், பந்து வீச்சில் இந்திய அணியில் சுட்டிக்காட்டும் வகையில் பலவீனங்கள் தென்படவில்லை. ஜஸ்பிரீத் பும்ராவின் உடற்தகுதி மட்டுமே சிறிது அச்சம் கொள்ளும் வகையில் உள்ளது. ஏனெனில் சமீபகாலமாக அவர், அதிக அளவிலான போட்டிகளில் விளையாடவில்லை. அவ்வவ்போது அவருக்கு சில ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாணியை இந்திய அணி லீக் சுற்றிலும் கடைபிடிக்கக்கூடும்.
103-ல் 71 வெற்றி
சொந்த மண்ணில் இந்திய அணி இதுவரை 103 சர்வதச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்திய அணி 71 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 30 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 2 ஆட்டங்களில் முடிவு இல்லை.
சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்காகவே ஷுப்மன் கில் நீக்கப்பட்டு இருந்தார். ஆனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் சஞ்சு சாம்சன் ஒட்டுமொத்தமாக 9.20 சராசரியுடன் 46 ரன்களே சேர்த்திருந்தார்.
தற்போது 3-வது வரிசையில் திறம்பட செயல்படக்கூடிய திலக் வர்மா அணிக்கு திரும்பி உள்ளார். இந்த இடத்தில் இஷான் கிஷன் விளையாடி வருகிறார். இதனால் சஞ்சு சாம்சன் இடத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. டி 20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் சஞ்சு சாம்சன் பார்முக்கு வரவில்லை என்றால் அவரது இடத்தை இஷான் கிஷன் கைப்பற்றக்கூடும்.
நமீபியா
நமீபியா அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பையில் களமிறங்குகிறது. அந்த அணி அதிகபட்சமாக அறிமுகமான 2021-ம் ஆண்டு சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அப்போது அந்த அணி நெதர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இம்முறையும் இந்த இரு அணிகளும் லீக் சுற்றில் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன.
கெர்ஹார்ட் எராஸ்மஸ்
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா தனது முதல் ஆட்டத்தில் ஓமன் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. அந்தப் போட்டியில் ரூபன் ட்ரம்பெல்மேன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
முன்னாள் வீரரான 41 வயதான கிரெய்க் வில்லியம்ஸ் அந்த அணியின் பயிற்சியாளராக மாறி உள்ளார். நமீபியா அணி இதற்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோதி உள்ளது. இதில் அந்த அணி தோல்விகளையே சந்தித்துள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு எதிராக 2 முறையும் அந்த அணி தோல்வி கண்டுள்ளது.
நெதர்லாந்து
நெதர்லாந்து அணி 7-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் களமிறங்குகிறது. அந்த அணி 2 முறை லீக் சுற்றை கடந்து அடுத்து சுற்றுவரை முன்னேறி இருந்தது. இதில் 2022-ம் ஆண்டு தொடரில் அந்த அணியின் பந்துவீச்சாளர் பாஸ் டி லீட் 13 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்து இருந்தார்.
ஸ்காட் எட்வர்ட்ஸ்
அதேவேளையில் பேட்டிங்கில் மேக்ஸ் ஓ’டவுட் 242 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து இடம் பிடித்திருந்தார். இவர்கள் இருவரும் தற்போதைய நெதர்லாந்து அணியிலும் இடம் பெற்றுள்ளனர். 40 வயதான ரோல்ஃப் வான்டர் மெர்வி தனது அனுபவத்தால் பலம் சேர்க்கக்கூடும்.
பாகிஸ்தான்
2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் சல்மான் அலி ஆகா தலைமையில் களமிறங்குகிறது. 2024-ம் ஆண்டு தொடரில் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றில் இந்தியா, அமெரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் மூட்டை கட்டியிருந்தது.
சல்மான் அலி ஆகா
டி20 தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இம்முறை லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக 8 முறை விளையாடி உள்ளது.
இதில் அந்த அணி 7 முறை தோல்விகளை சந்தித்துள்ளது. இம்முறை அந்த அணி தனது அனைத்து ஆட்டங்களையும் முற்றிலும் சுழலுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் விளையாடுகிறது. பந்து வீச்சில் நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி பலம் சேர்க்கக்கூடும். அனுபவம் வாய்ந்த பாபர் அஸம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
அமெரிக்கா
2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் தனது சொந்த மண்ணில் அமெரிக்க அணி கவனத்தை ஈர்க்கும் வகையிலான செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தது. அதை தற்போது வெளிநாட்டு மண்ணிலும் நிரூபித்துக் காட்ட முயற்சிக்கக்கூடும்.
கடந்த முறை கனடா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அமெரிக்க அணி லீக் சுற்றில் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றில் கால்பதித்து இருந்தது. ஆனால் அந்த சுற்றில் அந்த அணி 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. அதன் பின்னர் அமெரிக்க அணி வட அமெரிக்கா டி 20 கோப்பையில் கனடா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
மோனங்க் படேல்
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஓமன் அணிக்கு எதிரான இருதரப்பு டி 20 தொடரை 3-0 என வென்று அசத்தியிருந்தது. கடந்த முறை போன்று இம்முறையும் மோனங்க் படேல் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மோனங்க் படேல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரை சதம் அடித்து கவனம் ஈர்த்திருந்தார்.
ஐசிசி டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள சைதேஜா முக்கமல்லா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 21 வயதான அவர், சர்வதேச டி 20 மற்றும் ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் அவரது சராசரி 42.60 ஆக உள்ளது.