

புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன் உண்ணத் தடை வரும் என முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கிய மீன் அரசியல் தேர்தலில் தொடர்கிறது. மீன் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் இறக்குமதி செய்வதாகத் திரிணமூல் காங்கிரஸ்(டிஎம்சி) அரசு மீது பிரதமர் நரேந்திரமோடி புகார் வைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பூகோள ரீதியானக் காரணங்களால் அங்கு மீன்கள் உற்பத்தி அதிகம். இதனால், அம்மாநில மக்களின் ஆன்மிக நம்பிக்கையிலும் இடம்பெற்ற மீன் உணவை பிராமணர்களும் உண்பது உண்டு.
இதன் காரணமாக, சட்டப்பேரவைப் பிரச்சாரத்தின் இடையே, மீன் விவகாரத்தை முன்வைத்து முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து, பாஜகவின் வேட்பாளர்கள் கைகளில் மீன்களுடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்த மீன் அரசியல் தொடரும் வகையில் தற்போது பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி, மீன் உற்பத்தியில் டிஎம்சி அரசு போதிய கவனம் செலுத்தவில்லை எனப் புகார் கூறியுள்ளார். இதன் காரணமாக, பாஜக மற்றும் டிஎம்சி ஆகிய இரு கட்சிகளின் பிரச்சாரங்களில் மீன் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஹல்தியாவின் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘மேற்கு வங்க மாநிலத்தின் மீன் வளத்தை முறையாகப் பராமரித்து வளர்ப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்தது.
டிஎம்சி ஆட்சியில் மீன் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. அதேசமயம், பிஹாரில் மீனவர்களின் நலனுக்காக பாஜக பல்வேறு பணிகளை மேற்கொண்டதன் விளைவாக, அங்கு மீன் உற்பத்தி இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இங்கு மீன்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்தபோதிலும், அதற்கான உற்பத்தியைப் பெருக்குவதில் டிஎம்சி அரசு தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாகவே, மேற்கு வங்க மாநிலம் பிற மாநிலங்களிடமிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் மீன் விநியோகத்தை அதிகரிக்கவும், மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும் டிஎம்சி அரசு எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தால், மேற்கு வங்கத்தை மீன்வளம் மற்றும் கடல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கும்.’ எனத் தெரிவித்தார்.
மீன் விவகாரத்தில் தன்னை விமர்சித்த பிரதமர் மோடிக்கு பதிலடி அளிக்கும் வகையில் வடக்கு 24 பர்கானாவின் அகர்பாராவில் மம்தா பானர்ஜி பேசுகையில், ’பிரதமர் மோடி வைக்கும் மீன் மீதானக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. பிஹாரில் மீன் உற்பத்தி உண்மையில் அதிகரிக்கவில்லை.
மாறாக அங்கு மீனுக்கான தேவை குறைந்துவிட்டதே இதற்குக் காரணம். பாஜக அரசின் செயல்பாடுகளாலேயே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது. பிஹாரில் உள்ள மக்களை மீன் சாப்பிடவே நீங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இங்கே, நாங்கள் சந்தைகளில் மீன் வாங்கிச் சாப்பிடுகிறோம். முன்பு ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மீன்களை இறக்குமதி செய்து வந்தோம். தற்போது அந்த இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. பிரதமர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ராஜஸ்தான், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மக்களை மீன், முட்டை மற்றும் இறைச்சி சாப்பிட நீங்கள் அனுமதிப்பதில்லை. அத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
வங்காள மக்களுக்கு மீன் சாப்பிடுவது எப்படி என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். பாஜகவினர் உங்களை மீன் சாப்பிட விடமாட்டார்கள். நீங்கள் இறைச்சி சாப்பிட முடியாது, முட்டை சாப்பிட முடியாது, வங்காள மொழியில் பேச முடியாது. மீறிப் பேசினால், உங்களை 'வங்கதேசத்தவர்' என்று முத்திரை குத்துவார்கள்.’ என தெரிவித்தார்.
ஒரு படி மேலே சென்று பேசிய மத்திய அமைச்சர் சுகந்த் மஜும்தார், ’பாஜக ஆட்சிக்கு வந்தால், மீன் உண்ணும் பழக்கமுடைய ஒருவரே முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க வரும் பாஜக தலைவர்களை, அவர்கள் செல்லும் பகுதிகளில் முட்டை மற்றும் மீன்களைக் கொண்டு வரவேற்குமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.