‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின்

‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

பரமக்குடி: “விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையதளங்களில் வெளியானதற்கு, நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி கதிரவன், முதுகுளத்தூர் ராஜகண்ணப்பன், திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் ஆகியோரை ஆதரித்து இன்று (ஏப்.12) பரமக்குடியில் மாலை 4 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பரமக்குடியில் உள்ள தனியார் மஹாலில் தங்கினார். பின்னர், இன்று பரமக்குடியில் நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி காந்தி சிலை, பெரிய பஜார் பகுதிகளில் பொதுமக்களிடமும் , எமனேஸ்வரம் பகுதியில் பொது மக்களையும் சந்தித்து திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பொதுமக்கள் கைகுலுக்கி, செல்ஃபி, புத்தகங்களை வழங்கியும் மகிழ்ந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் தினமும் நடப்பது வாக்காளர்களை சந்திப்பதற்காக இல்லை. எப்போதும் காலையில் நான் நடப்பேன். சென்னையில் இருந்தாலும் சரி, எந்த ஊருக்குப் போனாலும் சரி காலையில் நடப்பது, எனது வழக்கம் . அப்போது நான் மக்களை சந்திக்கிறேன். தேர்தல் நேரமாக தற்போது இருப்பதால் நடைப் பயிற்சியின் போது மக்கள் வந்து என்னைச் சந்திக்கிறார்கள். உங்களுக்குத் தான் ஓட்டு என சொல்கிறார்கள். அது எனக்கு உற்சாகமாக உள்ளது. அதனால் நான் கொஞ்சம் கூடுதலாகவே நடக்கின்றேன்.

எடப்பாடி பழனிச்சாமி தோல்வியினுடைய விரக்தியில் இருக்கிறார். அந்த விரக்தியில் திமுக தலைவர்கள் பற்றி அவதூறாக பேசி வருகிறார். தமிழ் நாட்டுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி என்று நான் கூறி வருவதற்கு காரணம். அதிமுகவின் முகமுடி போட்டு தானே பாஜக உள்ளே வருகிறது. அதனால் தான் அப்படிக் கூறுகிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறித்து கண்டித்து அறிக்கை அளித்துள்ளேன். மேலும் டி.ஆர். பாலு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையதளங்களில் வெளியானதற்கும், நடிகர் விஜய் திமுகவிற்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று கூறி வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நோ கமெண்ட்ஸ். அதைப் பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார்.

‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின்
ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in