

ஜெய்ப்பூர்: “உலகின் மிகப்பெரிய எரிசக்தி சவாலை வெற்றிகரமாக சமாளித்தோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பார்மர் பிராந்தியம், தார் பாலைவனத்தில் சுமார் 38 எண்ணெய் வயல்கள் அமைந்துள்ளன. அந்த எண்ணெய் வயல்களில் நாள்தோறும் 1.8 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது.
நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 20 சதவீதத்தை பார்மர் எண்ணெய் வயல்கள் பூர்த்தி செய்கின்றன. அங்கிருந்து 670 கி.மீ. தொலைவில் இருக்கும் குஜராத்தின் ஜாம் நகர் ரிலையன்ஸ் ஆலைக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.
இதற்கு மாற்றாக ராஜஸ்தானிலேயே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டம், பச்சபத்ராவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பிறகு திட்டப் பணிகள் வேகம் பெற்றன. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து 4,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.79,459 கோடி செலவில் பிரம்மாண்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைத்துள்ளன. இது, நாட்டின் முதல் அதிநவீன பிஎஸ்-6 தரத்திலான பெட்ரோ கெமிக்கல் வளாகம் ஆகும்.
புதிய பச்சபத்ரா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு ஆசியா போரால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி சவாலை உலகம் எதிர்கொண்டது. எனினும் இந்த சவாலை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது. கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.75,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை மத்திய அரசே ஏற்றுக் கொண்டது.
மேற்கு ஆசிய போருக்கு முன்பாக 25 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வந்தோம். போர்க் காலத்தில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினோம். இதன்மூலம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதேபோல நாட்டின் எல்பிஜி சமையல் காஸ் தேவையையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தோம்.
மேற்காசிய போர் காரணமாக வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.2,000 வரை உயரும் அபாயம் எழுந்தது. எனினும் மத்திய அரசின் திறம்பட்ட கொள்கைகளால் சமையல் காஸ் விலை உயரவில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜோத்பூர் விமான நிலையம்
ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்தில் ரூ.480 கோடி செலவில் புதிய முனையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய முனையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திறந்து வைத்தார். மேலும் புதுப்பிக்கப்பட்ட உதான் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களின் விமானப் போக்குவரத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.28,840 கோடி செலவிடப்பட உள்ளது.
பச்சபத்ரா சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்த விழாவின் போது ரூ.13,000 கோடி மதிப்பிலான ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.900 கோடி மதிப்பிலான சுரு-சதுல்பூர், சுரு- ரத்தன்கர் ரயில் வழித்தட திட்டங்களையும் அவர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ராஜஸ்தானில் ஒட்டுமொத்தமாக ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
குஜராத்தில் செமி கண்டக்டர்
ராஜஸ்தான் பயணத்தை தொடர்ந்து குஜராத்தின் சாணந்த் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு ரூ.7,500 கோடி முதலீட்டில் கட்டப்பட்டு உள்ள செமி கண்டக்டர் ஆலையை அவர் திறந்து வைத்தார். இந்த ஆலையில் ஆண்டுக்கு 500 கோடி செமி கண்டக்டர் ‘சிப்’களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.