புதுடெல்லி: ‘‘நமது அரசியலமைப்பு நம்மை எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அப்படிப்பட்ட மக்களாக நாம் மாற வேண்டும்,” என்று மாணவர்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி கண்டோன்மென்ட்டில் நடைபெற்ற தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங், என்சிசியின் மூன்று பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்களால் வழங்கப்பட்ட பிரம்மாண்ட 'மரியாதை அணிவகுப்பை' பார்வையிட்டார். பின்னர், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "உலகம் நிச்சயமற்ற காலகட்டத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமது இளைஞர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் வலிமையாக இருந்து, ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நாடு தனது ஆயுதப் படைகளுக்குப் பின்னால் அணி திரண்டபோது, தங்கள் பங்கை மிகச் சிறப்பாக ஆற்றிய தேசத்தின் இரண்டாவது தற்காப்புப் படை வீரர்கள், என்சிசி படையினர். நாடு முழுவதும் மாதிரிப் பயிற்சிகள் நடத்தப்பட்டபோது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் அவர்கள். துணிச்சலும், அர்ப்பணிப்பும் நிறைந்த அவர்களிடம் இருந்து, இளைஞர்கள் உத்வேகத்தைப் பெற வேண்டும்.
இந்திய ஆயுதப் படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளை அழித்தன. நமது வீரர்கள் தைரியத்துடனும் நிதானத்துடனும் செயல்பட்டனர். நம்மைத் தாக்கியவர்களை மட்டுமே நாம் குறிவைத்து அழித்தோம், வேறு யாரையும் அல்ல. அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் வலிமையாக இருந்ததாலேயே இது சாத்தியமானது.
2047-ம் ஆண்டுக்குள் தேசத்தை வளர்ந்த பாரதமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இளைஞர்களிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள ஒரு காலகட்டத்தில் தற்போது நாம் நுழைந்துள்ளோம். அவர்கள், தேசத்தின் விலைமதிப்பற்ற சொத்துக்கள். அவர்கள், நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் பொறுப்பைத் தாங்கியவர்கள்.
இளைஞர்களை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த ஊடகமாக என்சிசி திகழ்கிறது. இன்று உலகம் ஏராளமான வசதிகளை வழங்குகிறது. வீடியோ கேம்கள், உணவு விநியோகம் போன்ற பிற விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வசதியைக் கொண்டு வருவதற்காகவே உள்ளன. அதேநேரத்தில், இத்தகைய வசதிகளில் இருந்து இளைஞர்கள் வெளியே வர என்சிசி உதவுகிறது. என்சிசி, ஒரு மாணவரை மனதளவில் வலிமையாக்குகிறது. மாணவர்களிடையே ஒழுக்கத்தையும் தேசபக்தியையும் வளர்ப்பதோடு, 'கவனக்குறைவு' என்ற சிக்கலைச் சமாளிக்கவும் என்.சி.சி உதவுகிறது.
பரம் வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் மனோஜ் பாண்டே, கேப்டன் விக்ரம் பத்ரா ஆகியோர் என்.சி.சி மாணவர்களாக இருந்தவர்கள். பிரதமர் நரேந்திர மோடியும் நானும் கூட என்.சி.சி மாணவர்களாக இருந்தோம். பலர் என்.சி.சி-யில் பட்டம் பெற்று நாட்டின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளனர். 1965 மற்றும் 1971 போர்களின் போது, என்.சி.சி மாணவர்கள் இரண்டாவது பாதுகாப்புப் படையாகப் பயன்படுத்தப்பட்டனர்.
ஜனவரி 26 அன்று நாடு தனது 77-வது குடியரசு தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இந்த நாள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான நாட்டின் உறுதியை வலுப்படுத்த ஒரு நினைவூட்டலாக அமைகிறது. அரசியலமைப்பு என்பது வெறும் உரை மட்டுமல்ல, அது நமது சமூக, அரசியல், கலாச்சார, உரிமைகள் மற்றும் கடமைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்.
நமது அரசியலமைப்பு நம்மை எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அப்படிப்பட்ட மக்களாக நாம் மாற வேண்டும். நாம் நமது அரசியலமைப்பைப் புரிந்துகொண்டு, நமக்கு வழங்கப்பட்ட கடமைகளையும் உரிமைகளையும் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.