

புதுடெல்லி: அனைத்து துறைகளிலும் வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பு விடுத்துள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான இளம் தலைவர்களின் கலந்துரையாடல் 2026' நிகழ்ச்சி டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
எனக்கும் இந்திய இளைஞர்களுக்கும் 60 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. நான் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் பிறந்தேன். எனது நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே நோக்கமாக இருந்தது. எனது சிறுவயது முதல் இப்போது வரை இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறேன்.
உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சில நாடுகள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட போர்களை நடத்தி வருகின்றன. நாம் வலுவாக இருந்தால் நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. நாம் சுதந்திரமாக வாழலாம்.
ஒரு நாட்டுக்கு சிறந்த தலைமை தேவை. இப்போது இந்தியாவுக்கு மிகச் சிறந்த தலைமை (பிரதமர் நரேந்திர மோடி) கிடைத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் புதிய உச்சத்தை இந்தியா எட்டிப் பிடித்துள்ளது. இனிமேல் ‘ஆட்டோ பைலட்' முறையில் பயணித்தால்கூட வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற லட்சியத்தை நிச்சயமாக எட்ட முடியும். ஒவ்வொரு இந்திய இளைஞரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். நீங்கள் முன்னேறினால், இந்தியாவும் முன்னேறும்.
எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மேம்பாடு என அனைத்து துறைகளிலும் வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்கு இந்திய இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அஜித் தோவல் பேசினார்.