புதுடெல்லி: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இம்முறை எல்லையில் இல்லாமல் கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதற்கு, முயற்சி செய்து பாருங்கள் என்று ராஜ்நாத் சிங் சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங், “இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று கூறுவதற்கு முன்பாக 1971 போரில் என்ன நடந்தது என்பதை அந்த நாடு கருத்தில் கொள்வது நல்லது. 1971 போர் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மிகப் பெரிய ராணுவ மோதல். அதில், பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. வங்கதேசம் உருவாக அது வழிவகுத்தது.
55 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மேற்கு வங்கத்தின் மீது கண் வைக்க முயன்றால், இந்த முறை பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாக சிதறும் என்பது கடவுளுக்கே தெரியும்” என்று எச்சரித்தார்.
ஈரான் போரால் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றால், இந்தியாவின் பதிலடி முன்னெப்போதும் இல்லாததாக இருக்கும் என்று கடந்த வாரம் எச்சரித்திருந்தார். இது தொடர்பாகப் பேசிய ராஜ்நாத் சிங், “தற்போதைய சூழலில் நமது அண்டை நாடு எந்தவொரு தவறான செயலையும் செய்யக்கூடும். அவ்வாறு அது செய்தால், இந்தியாவின் பதிலடி முன்னெப்போதும் இல்லாததாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிந்துவிடவில்லை” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பாகிஸ்தானின் சியால்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றால், இறைவனின் அருளால் நமது பதில் தாக்குதலை கொல்கத்தாவுக்கே கொண்டு செல்வோம்.
இந்த முறை நமது தாக்குதல் 200 அல்லது 250 கிலோமீட்டர் தூரம் என்ற அளவில் எல்லையோரத்தில் இருக்காது. அவர்களது பிராந்தியத்தில் நுழைந்து, அவர்களது வீட்டிலேயே தாக்குவோம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.